பதிவு செய்த நாள்
11
ஜன
2012
12:01
சபரிமலை: சபரி மலை அய்யப்பன் கோவிலில், பக்தர்கள் காணிக்கையாக சமர்பித்தது 2.32 கிலோ தங்கம் என கணக்கிடப்பட்டுள்ளது. கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் சபரி மலை அய்யப்பன் கோவிலில் தற்போது மகரஜோதி உற்சவம் நடந்து வருகிறது. இக்கோவிலுக்கு நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் தரிசனத்திற்கு வருகின்றனர். இதுவரை கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக, 2.32 கிலோ தங்கம் சமர்ப்பித்துள்ளனர். இவ்வாறு தினமும் பக்தர்கள் அளிக்கும் தங்க காணிக்கைகளுக்கு உடனுக்குடன் ரசீது வழங்கப்படுகிறது. பக்தர்களிடம் இருந்து பெறப்படும் தங்கம், வெள்ளி போன்ற காணிக்கை பொருட்கள் உடனுக்குடன் பாதுகாப்பாக வைக்கப்படுகிறது.
தங்க டாலர் விற்பனை துவக்கம்: அய்யப்பனின் உருவம் பொறித்த இரண்டு, நான்கு, 5.10 கிராம் எடை கொண்ட தங்க டாலர்கள் விற்பனை துவங்கியது. அன்றைய தினம் தங்கத்தின் விலைக்கேற்ப இந்த டாலர்கள் விற்கப்படுகிறது. மேற்கண்ட விவரங்களை அய்யப்பன் கோவில் செயல் அலுவலர் சதீஷ்குமார் தெரிவித்தார்.
பஞ்ச புண்ணியாகம்: நேற்று முன்தினம் அதிகாலை சன்னிதானத்தில் பக்தர் ஒருவரின் காலில் இருந்து ரத்தம் கொட்டியதால், சபரி மலை அய்யப்பன் கோவில் நடை அரை மணி நேரம் அடைக்கப்பட்டது. தொடர்ந்து பஞ்ச புண்ணியாகம் நடத்தப்பட்டு கோவில் சுத்தம் செய்யப்பட்டது. அதன் பின்னரே, அதிகாலை பூஜை நடந்தது.