பதிவு செய்த நாள்
11
ஜன
2012
12:01
சபரிமலை: மகரவிளக்குக்கு முன்னோடியாக சபரிமலை சன்னிதானத்தில் ஜன.,13 முதல் சுத்திகிரியை பூஜைகள் துவங்குகிறது. வரும் ஜன.,15 ல் சபரிமலையில் மகரவிளக்கு பெருவிழா நடைபெறுகிறது. இதற்கு முன்னோடியாக ஜன.,13 மற்றும் 14 ல் சுத்திகிரியை பூஜைகள் துவங்கும் என்று தந்திரி கண்டரரு மகேஸ்வரரு அறிவித்துள்ளார். ஜன.,13 ல் தீபாராதனைக்கு பின், பிராசாத சுத்தி பூஜை, ரக்÷ஷாபனஹோமம், ரக்ஷா கலசம், வாஸ்துஹோமம், வாஸ்துபலி போன்ற பூஜைகள் நடைபெறும். ஜன.,14 ல் உச்சபூஜைக்கு முன்னோடியாக பிம்பசுத்தி பூஜைகள், சதுசுத்தி, தார, பஞ்சகம், பஞ்சகவ்யம் ஆகிய சடங்குகள் நடைபெறும். மறுநாள் அதிகாலை 12.59 மணிக்கு மகரசங்கரம பூஜை நடைபெறுகிறது.
பாதுகாப்பு ஏற்பாடுகள்: கடந்த ஆண்டு புல்மேட்டில் நடைபெற்ற சம்பவம் காரணமாக இந்த ஆண்டு மகரவிளக்குக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னதாகவே துவங்கி விட்டது. மகரஜோதி தரிசிக்க வரும் பக்தர்கள் அங்கீகரிக்கப்பட்ட பாதைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று சன்னிதானம் போலீஸ் தனி அதிகாரி செல்லப்பன் கேட்டுக்கொண்டுள்ளார். குறுக்கு வழிகளை பக்தர்கள் பயன்படுத்த கூடாது என்றும், ஜோதி தரிசனத்துக்கு பின், நிதானமாக மலை விட்டு இறங்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். கர்நாடகாவில் இருந்து மூன்று எஸ்.ஐ.,க்கள் தலைமையில் 30 போலீசார் சன்னிதானத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மகரவிளக்கு நாளில் பக்தர்களுக்காக ஆயிரம் பஸ்களை பம்பையில் இருந்து இயக்க கேரள அரசு போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது. இதில் 350 பஸ்கள் நிலக்கல்-பம்பை செயின் சர்வீசுக்கு பயன்படுத்தப்படும். பத்தணந்திட்டையில் பஸ்கள் நிறுத்தப்பட்டு, தேவைக்கேற்ப பம்பைக்கு வரவழைக்கப்படும்.