பதிவு செய்த நாள்
05
மே
2018
01:05
அப்போது அவன் துரியோதனனிடம், நண்பனே! அர்ஜுனனுக்கு தேரோட்ட மாயாவியான கண்ணன் இருக்கிறான். அதுபோல், மிகச்சிறந்த தேரோட்டி ஒருவன் எனக்கு வேண்டும். அதுமட்டுமல்ல! போரில் சமயத்துக்கு தகுந்தபடி முடிவெடுக்கும் அறிவாளியாகவும் அவன் இருக்க வேண்டும். அப்படிப்பட்டவன் தான் சல்லியன் (இவன் நகுலன், சகாதேவனின் தாய்மாமன், சந்தர்ப்பவசத்தால் துரியோதனனின் படையில் இணைந்தவன்) அவன் எனக்கு சாரதியானால், கிருஷ்ணாச்சுனர்களைக் கொல்வேன். பீமனை வெல்வேன், என கர்ஜித்தான். இதைக் கேட்ட துரியோதனன் சல்லியனிடம் சென்று, நான் ஒரு உதவி கேட்கிறேன். அதைச் செய்வாயா? என்றான்.சல்லியன் மிகவும் மகிழ்ந்து, வீரனே! நீ ஒரு உதவி கேட்டு அதை நான் மறுப்பேனா! சொல், என்றான். துரியோதனன் விஷயத்தைச் சொல்லவும், சல்லியன் ஆத்திரமடைந்தான். துரியோதனா! உன்னைத் தவிர வேறு யாராவது இப்படி என்னிடம் சொல்லியிருந்தால் அவர்களின் நாக்கை அறுத்திருப்பேன். பிறப்பால் இழிந்த ஒருவனுக்கு நான் தேரோட்டுவதாவது! உன் படையை இரண்டாகப் பிரி. ஒன்றை என் வசம் ஒப்படை. அதைக் கொண்டு பாண்டவர்களை அழித்து விடுகிறேன். கர்ணனின் தலைமையிலுள்ள படையின் உதவியின்றியே இதைச் செய்கிறேன். அந்தளவுக்கு என் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. ஒருவேளை நான் இதை செய்யாமல் தோற்றுப்போனால் கர்ணனுக்கு சாரதியாகிறேன், என்று வீரமாகப் பேசினான்.
துரியோதனன் அவனைச் சமாதானம் செய்தான். சல்லியா! பரமசிவனுக்கு தேரோட்டியாக பிரம்மன் இருக்கிறான். அர்ஜுனனுக்கு தேரோட்டியாக பாற்கடலில் பள்ளிகொண்ட நாராயணனனே கிருஷ்ணனாக வந்து தேரோட்டுகிறான். அர்ஜுனனும் முன்பு விராட தேசத்தரசனின் மகன் உத்தரகுமாரனுக்கு தேரோட்டியாக இருந்தவன் தானே! அவர்கள் எல்லாருமே உலகத்தவரால் மதிக்கப்படுபவர்கள் தான். தேர் ஓட்டுவது பெருமைக் குறைவுக்கு உரியதல்ல. எல்லாக் கலையிலும் வல்லவர்களே தேரோட்ட முடியும், என்று புகழ்ந்து பேசினான். வேறு வழியின்றி சல்லியன் கர்ணனுக்கு தேரோட்ட சம்மதித்தான். இதையறிந்த கர்ணனும், கவுரவ வீரர்களும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இந்திரனிடம் இழந்த கவச குண்டலங்களைத் திரும்பப் பெற்றது போல் கர்ணன் மகிழ்ந்தான். அவனைக் கட்டி யணைத்து தனது தேரில் ஏற்றினான். நட்சத்திரக் கூட்டங்களுக்கு மத்தியில் இருக்கும் சூரியனைப் போல, கர்ணன் படைகளுக்கு மத்தியில் தனது தேரில் கம்பீரமாக நின்று, பகைவர்களுக்கும் தானத்தை வாரி வழங்கினான். பல பிராமணர்களும் போர்க்களத்தில் வந்து தானம் பெற்றுச் சென்றனர்.பின்னர் சல்லியனிடம் கர்ணன், சல்லியா! எனக்கு நிகரானவர் இந்த போர்க்களத்தில் அர்ஜுனனைத் தவிர யாருமில்லை. நீ அவனருகே தேரோட்டிச் செல். என்னிடம் விஸ்வகர்மாவால் உருவாக்கப்பட் டதும், பரசுராமரால் எனக்கு அளிக்கப்பட்டதுமான விஜயம் என்ற வில் இருக்கிறது. அதைக் கொண்டும், உனது தேரோட்டும் திறமை கொண்டும் அர்ஜுனனை அழிப்பேன், என வீரவாதம் செய்தான்.
அப்போது சல்லியன் சற்று கேலியாக, கர்ணா! அர்ஜுனனிடம் இதே போர்க்களத்தில் பலமுறை நாங்கள் உன்னருகே நின்றும் பின்வாங்கி ஓடியிருக்கிறாய். இப்போது வீரம் பேசுகிறாய். முதலில் காரியத்தை முடி. ஒன்றைச் செய்வதற்கு முன் அது நிறைவடைந்து விட்டதாக நினைப்பவனுக்கும் உனக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது? மேலும், நடக்கப்போவதை யாரும் அறிய மாட்டார்கள், என்றான். இதைக் கேட்ட கர்ணனுக்கு கோபம் வந்து விட்டது.சல்லியனே! கேலி பேசாதே. தேரோட்ட வந்தவன், நான் எங்கே தேரோட்டச் சொல்கிறேனோ அங்கே செல்ல வேண்டும். அதை விடுத்து, எனக்கு புத்தி சொல்லும் வேலையெல்லாம் தேவையில்லை, என்றான். உடனே சல்லியனுக்கு கோபம் அதிகமாகி தேரில் இருந்து கீழே இறங்கி, உருவிய வாளுடன் நின்றான். கர்ணனைப் போருக்கு அழைத்தான். கர்ணனும் அவனுடன் மோதத் தயாரானான். இதைப் பார்த்த துரியோதனன் பயந்து போனான். அவர்கள் இருக்குமிடம் வந்து அவர் களைச் சமாதானம் செய்து, சல்லியனை மீண்டும் தேரில் ஏற்றினான். கிருபாச்சாரியார், சகுனி, அஸ்வத்தாமன் உள்ளிட்ட வீரர்கள் கர்ணனைச் சூழ்ந்து நிற்க துரியோதனன் அதைப் பார்த்து பெருமையடைந்தான். அர்ஜுனன் அழிந்தான் என்றே முடிவு கட்டினான். போர் துவங்கியது. பாண்டவர் தரப்பில் அன்று பெரும் சேதத்தை கர்ணன் தலைமையிலான படை ஏற்படுத்தியது. இதைக் கண்ட பீமன் கர்ணனுடன் போருக்கு வந்தான். இருவரும் சமபலத்துடன் போரிட்டனர். கர்ணா! என் சகோதரன் அர்ஜுனன் உன்னைக் கொல்வதாக சபதம் செய்திருக்காவிட்டால், இப்படி உன்னுடன் போர் செய்து கொண்டிருக்கமாட்டேன். உன்னை என் ஒரு விரலாலேயே நசுக்கியிருப்பேன், என்று சொல்லிவிட்டு வேறு இடத்துக்குச் சென்றான்.
இந்த வீரவார்த்தைகளால் உற் சாகமடைந்த பாண்டவர் படை, கவுரவர் படை யிலுள்ள மன்னர்களையெல்லாம் வேட்டையாடியது. பல மன்னாதி மன்னர்கள் வீரசொர்க்கம் அடைந்ததும், கவுரவ படை பின் வாங்கியது. இதுகண்ட அஸ்வத்தாமன், பாண்டவர் படையை தன் பலத்தால் தடுத்து நிறுத்தினான். அர்ஜுனனும் அவன் முன்னால் வந்து நின்றான். அவனது தேரை ஒரே அம்பால் அடித்து நொறுக்கிய அர்ஜுனன், அஸ்வத் தாமனை உயிரோடு விட்டுவிட்டான். பின்னர் தர்மரும் கர்ணனும் கடுமையாகப் போரிட்டனர். கர்ணனின் அம்புகளுக்கு அவர் நீண்டநேரம் தாக்குப்பிடித்தாலும், கடைசியில் சோர்ந்து போன அவர் புறமுதுகிட எண்ணினார். அப்போது கர்ணன் அவரிடம், நீர் அறிவில் சிறந்தவர், சிறந்த நண்பர்களைக் கொண்டவர். தர்மம் தவறாத தம்பிமார்களைக் கொண்டவர். உலகையே அரசாளத்துடிக்கும் நீர், இப்படி புறமுதுகிட்டு ஓட நினைப்பது அழகா? கடைசி வரை எதிர்த்து நிற்க வேண்டாமா? என்றான். தர்மரும் புறமுதுகிடும் தன் எண்ணத்தை கைவிட்ட வேளையில், பீமன் அவருக்கு துணையாக வந்தான். உடனே சல்லியன் கர்ணனிடம், பீமன் வந்துவிட்டான். இனி தர்மரையோ, பீமனையோ உன்னால் வெல்ல முடியாது, என்று கர்ணன் மீதுள்ள வஞ்சகத்தால் இகழ்ச்சியாகப் பேசினான். கர்ணன் மீண்டும் கோபத்துடன் அவனைப் பார்த்தான்.