பதிவு செய்த நாள்
05
மே
2018
02:05
துரியோதனா! இந்தப் போர் தேவையில்லை. இந்த தேசத்தை நான் ஆண்டால் என்ன! அல்லது நீ ஆண்டால் என்ன! உன் தலைமையிலேயே ஆட்சி நடக்கட்டும். உனக்கு ஏவல் செய்யும் காவலர்களாக நாங்கள் ஐவரும் விளங்குகிறோம். இந்தச் சகோதரர்கள் ஒற்றுமையாக வாழ்ந்தார்கள் என்று எதிர்கால உலகம் பாராட்டட்டும். நீயே இந்த ஆட்சியை எடுத்துக் கொள்கிறாயா? என்று பெருந்தன்மையுடன் கேட்டார். தர்மர் என்று இவருக்கு பெயர் வந்ததன் காரணமே இதுதான். எவ்வளவு நல்ல குணம்! இவர்கள் ஐவரும் சேர்ந்தால் துரியோதனனை ஒரே நிமிடத்தில் பொடியாக்கி விட்டு, ஆட்சியை இப்போதே எடுத்துக் கொள்ளலாம். ஆனாலும், தர்மர் துரியோதனனை பெரியப்பா மகன் என எண்ணாமல், உடன் பிறந்தவனாகவே கருதி சொன்னார். ஒருவனுக்கு நேரம் சரியில்லை என்றால், யார் நல்லதைச் சொன்னாலும் கேட்கமாட்டான். துரியோதனனுக்கு விதி முடிய வேண்டும் என்ற நிலை வந்துவிட்டது. முடியவே முடியாது. என் தம்பிகளையும், உறவினர்களையும் போரில் இழந்தேன். இப்போது, நீ இடும் இந்த பிச்சையை வாங்கி உயிர் வாழும் வாழ்க்கை ஒரு வாழ்க்கையா? அதை விட போரில் உயிர்விட்டு, காக்கைகளுக்கும், கழுகுகளுக்கும் உணவான புண்ணியத்தையாவது பெறுவேன், என மறுத்து விட்டான் துரியோதனன். ஸ்யமந்தக பஞ்சகத்தை அடைந்ததும் பீமனுக்கும், துரியோதனக்கும் போர் ஆரம்பமானது. கதாயுதங்களால் ஒருவரை ஒருவர் தாக்கினர். நீண்டநேரம் போர் தொடர்ந்ததே தவிர, யாருமே சளைத்ததாகத் தெரியவில்லை. அப்போது துரியோதனன், பீமா! உன் உடலில் உயிர் எங்கிருக்கிறது என்பதை மறைக்காமல் சொல், என்றான்.
தர்மரின் தம்பிக்கு சொல்லிக் கொடுத்தாலும் பொய் சொல்லத் தெரியுமா? துரியோதனனை என் உடன் பிறந்தவனே என பாசத்துடன் அழைத்து, என் தலையில் தான் உயிர் இருக்கிறது என்றான். அதைக் கேட்டது தான் தாமதம். துரியோதனன் பீமனின் தலையில் இடியென கதாயுதத்தால் தாக்கினான். பீமன் சுருண்டு விட்டான். சற்றுநேரம் கழித்து சுதாரித்து, துரியோதனா! நான் உள்ளதைச் சொன்னது போல், உன் உயிர்நிலை எங்கிருக்கிறது சொல், என்று கேட்டான். பண்பாடு என்றால் என்னதென்றே தெரியாத துரியோதனன், அது நெற்றியில் இருக்கிறது, என்று பொய் சொன்னான். பீமன் அதை நம்பி அவன் நெற்றியில் தாக்க ரத்தம் பெருகி மயங்கிச் சாய்ந்தான் துரியோதனன். ஆனாலும், அவனை பீமன் கொல்லவில்லை. அவன் இளைப்பாற நேரம் கொடுத்தான். சற்றுநேரம் கழித்து மீண்டும் போர் தொடங்கியது. பீமனுக்கு தொடர்ந்து தலையில் அடி விழுந்ததால் அவன் பலமிழந்து சோர்ந்தான். அப்போது அர்ஜுனன் கிருஷ்ணரிடம், கண்ணா! இதென்ன விபரீதம்! பீமன் இறந்து விடுவான் போலிருக்கிறதே! நீ அவனைக் காப்பாற்ற வழி செய், என்றான். கிருஷ்ணர் அவனிடம், அர்ஜுனா! இவர்கள் உயிரை இழந்துவிடுவார்களோ என பயப்படாதே. எத்தனை நாள் போர் நடந்தாலும் சரி... இவர்கள் சாகமாட்டார்கள். இருவருக்கும் போர் நடக்கும் இந் நேரத்தில் என்னால் எந்த உதவியும் உங்களுக்கு செய்ய இயலாது. ஆனால், ஒன்றை மட்டும் உன்னிடம் சொல்கிறேன். துரியோதனனின் தொடையில் தாக்கினால் அவன் இறந்து போவான், என்றார். உடனே அர்ஜுனன், தனது தொடையில் கை வைத்து பீமனுக்கு ஜாடை காட்டினான். பீமன் அதைப் புரிந்து கொண்டு, துரியோதனனின் தொடையில் கதாயுதத்தால் தாக்கினான். துரியோதனன் சுருண்டு விட்டான். அந்த நிலையிலும், பீமனைக் கடுமையாகத் தாக்கினான்.
கிருஷ்ணரை நோக்கி, ஏ கிருஷ்ணா! உன்னைப் போல் இழிந்தவன் எவனும் இந்த பூமியில் இல்லை. எனது உயிர்நிலையை அர்ஜுனன் மூலம் பீமனுக்கு சொன்னாய். அதனால், பீமன் என்னை குறிவைத்து தாக்குகிறான். பல துரோகங்களைச் செய்தே இந்தப் போரில் நீ பாண்டவர்களை வெற்றி பெற வைத்தாய், என்று பெருமூச்சுடன் கத்தினான். இச்சமயத்தில் பீமன் துரியோதனனின் தொடையில் ஓங்கி ஓங்கி மிதித்தான். இக்காட்சியைக் கண்ட கிருஷ்ணரின் அண்ணன் பலராமன் கொதித்துப் போனார்.கண்ணா! நீ செய்தது முறையல்ல! கதாயுதப் போர் விதிப்படி தொடைக்கு மேல் தான் அடிக்க வேண்டும், ஆனால், நீ அர்ஜுனன் மூலம் செய்த சைகையால் போர் விதிக்கு மாறாக பீமன் துரியோதனனை தொடைகளில் தாக்குகிறான். தலையில் மிதிக்கிறான். விதியை மீறிய பீமனை நான் கடுமையாகத் தாக்கி விரட்டியடிக்கப் போகிறேன், என்றார். கிருஷ்ணர் வேகமாகச் சென்று பலராமரைத் தடுத்தார்.அண்ணா! தாங்கள் கோபிக்க வேண்டாம். இந்த 18 நாள் போரில் துரியோதனன் செய்த வஞ்சனைகள் கொஞ்ச நஞ்சமல்ல. மேலும், வில்லாசிரியர் மைத்ரேயரும், திரவுபதியும் இட்ட கொடிய சாபங்களும் இப்போது அவனைத் துன்புறுத்துகின்றன. இத்தனை நாளும் பாண்டவர்கள் தவறு செய்யவில்லை. இன்று ஒருநாள் மட்டும் மாறுபட்டதை பெரிய பிழையாக எடுத்துக் கொள்ளாதீர்கள், என்றார்.
இதுகேட்டு பலராமன் அமைதியடைந்தார். இதற்குள் துரியோதனனை பீமன் துவம்சம் செய்து விடவே அவன் உயிர் போகும் நிலையில் கிடந்தான். அஸ்வத்தாமன் அவனைப் பார்த்து அழுதான். துரியோதனனை மார்புற அணைத்து, நீ என்னை ஆரம்பத்திலேயே படைத்தலைவனாக நியமித்திருந்தால் இந்த நிலைமை உனக்கு வந்திருக்காது. பீஷ்மர், துரோணர், விதுரர் சொன்ன அறிவுரைகளையும் கேட்க மறுத்தாய். அதனால் இன்று இந்த நிலைக்கு ஆளானாய். இருந் தாலும், என் சபதத்தைக் கேள்! உனக்காக இன்னும் போராடுவேன். இன்று இரவுக்குள் பாண்டவர் களை அழிப்பேன், என சபதம் செய்தான். துரியோதனன் தனது மணிமுடியை அவனுக்குச் சூட்டி மகிழ்ச்சியுடன் அனுப்பி வைத்தான். அஸ்வத்தாமன், கிருபாச்சாரியார், கவுரவர் படையின் தேர்ப்படை தளபதி கிருதவர்மா ஆகியோர் மட்டுமே மிஞ்சியிருந்தனர். அவர்கள் பாண்டவர்களின் பாசறையை அடைந்தனர். அவர்கள் உள்ளே நுழையவும், பாசறைக்குள் இருந்து ஒரு பயங்கர உருவம் வெளிப்பட்டது. அதன் தாக்குதலை அந்த மூவராலும் தாங்கமுடியவில்லை. யார் அந்த உருவம்?