பதிவு செய்த நாள்
07
மே
2018
12:05
செஞ்சி: கீழ்மாம்பட்டு அம்மச்சார் அம்மன் கோவிலில் 1008 பால் குடம் ஊர்வலம் நடந்தது. செஞ்சி தாலுகா கீழ்மாம்பட்டு அம்மச்சார் அம்மன், செல்வ விநாயகர், ஸ்ரீநிவாச பெருமாள் கோவில் 18ஆம் ஆண்டு 10 நாள் மகா உற்சவம் மற்றும் 8ம் ஆண்டு தேர்திருவிழா கடந்த 4ம் தேதி துவங்கியது. அன்று காலை 7 மணிக்கு வினாயகர் பூஜை, அனுக்ஞை, கணபதி ஹோமம், செல்லியம்மன் பூங்கரகம் ஜோடித்து அழைத்து வருதல், தொடர்ந்து சாகை வார்த்தல் நடந்தது. மாலை 7 மணிக்கு நவசந்தி காப்பும், பூங்கரக வீதியுலாவும் நடந்தது.
கடந்த 5ம் தேதி அம்மச்சார் அம்மனுக்கு 108 சங்காபிஷேகமும், நேற்று காலை அம்மச்சார் அம்மன் கோவிலில் இருந்து பத்மினி தேவி மூர்த்தி தலைமையில் பெண்கள் 1008 பால் குடங்களை முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து வந்தனர். பகல் 11 மணிக்கு செல்வ விநாயகர், அம்மச்சார் அம்மன், சீனுவாச பெருமாளுக்கு பால்குட அபிஷேகம் நடந்தது. இரவு சாமி வீதி உலா நடந்தது. இதில் முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்க செயலாளர் கிருஷ்ணதாஸ், நாராயணசாமி, விழாக்குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு தொடர் அன்னதானம் நடந்தது. விழாவின் தொடர்ச்சியாக 7 ம் தேதி மாலை 5 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், 12ம் தேதி மாலை திருவிளக்கு பூஜையும், 13 ம் தேதி காலை 8.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும் நடக்க உள்ளது.