பதிவு செய்த நாள்
07
மே
2018
12:05
நாமக்கல்: ராசிபுரம், கோட்டை முனியப்பன் கோவிலில், நேற்று கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த, 3ல் கிராமசாந்தி, 4ல், மஹா கணபதி, நவகிரஹம், மகாலட்சுமி ஹோமங்களும் நடந்தது. தொடர்ந்து அன்று, காவிரியாற்றில் இருந்து தீர்த்தம் மற்றும் முளைப்பாரி எடுத்து குதிரை, யானை ஆகியவையுடன் திருவீதி ஊர்வலம், வாஸ்து சாந்தி, யாகசாலை பிரவேசம் நடந்தது. நேற்று முன்தினம் இரண்டாம் கால யாக பூஜை, கோபுர கலசங்கள் வைத்தல், விமானம் கண்திறப்பு, அஷ்டபந்தனம் ஆகியவை நடந்தது. நேற்று அதிகாலை, 3:30 மணிக்கு நான்காம் கால யாகபூஜை, தீபாராதனை, 5:30 மணிக்கு விமான கோபுர கும்பாபிஷேகம், 6:00 மணிக்கு கோட்டை முனியப்பன் மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடந்தது. சிவாச்சாரியார்கள், கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடத்தி வைத்தனர். 2,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை ஆய்வர் செல்வி, செயல் அலுவலர் ராஜகோபால், திருப்பணி கமிட்டி நிர்வாகிகள், உறுப்பினர்கள் பக்தர்கள் செய்திருந்தனர்.