அறுகம்புல் விநாயகருக்கு உகந்தது நமக்குத் தெரியும். அதே போல் வன்னி இலை மற்றும் மந்தாரை மலர்களாலும் பிள்ளை யாரை அர்ச்சனை செய்து வழிபடலாம் என்பர் பெரியோர்கள். ‘இந்த இலைகளைக்கொண்டு தம்மை வழிபடுபவர்களுக்கு கஷ்டங்கள் விலகும். இஷ்ட காரியங்கள் கைகூடும்’ என்பது பிள்ளையார் பெருமானின் அருள்வாக்கு என்கின்றன புராணங்கள். காரணம் என்ன தெரியுமா? மந்தரான் - சமி என்ற தம்பதி, பிள்ளையாரைப் போன்றே உருவம் கொண்ட புருசுண்டி முனிவரை, அவரது உருவத்தைக் கண்டு கேலி செய்தார்கள். அதனால் கோபம் கொண்ட முனிவர், அவர்களை மரங்களாகும்படி சபித்தார். பின்னர் தவறு உணர்ந்து வருந்திய அந்தத் தம்பதியிடம், “வருந்தாதிர்கள். மரங்களாகித் திகழப்போகும் உங்கள் நிழலில் விநாயகர் குடிகொண்டு அருள் பாலிப்பார்” என்று ஆற்றுப்படுத்தினார். அதன்படியே நடந்தது. மந்தாரனின் குருவான சவுனக முனிவர், வன்னி -மந்தாரை மரங்களின் அடியில் இருந்த விநாயகரை வழிபட்டு தவமிருக்க, அதனால் மகிழ்ந்த விநாயகர், மேற் சொன்னது போல் வன்னி மரத்துக்கும், மந்தாரை மலருக்கும் மகிமைகூட அருள்பாலித்தாராம்.