தேனி, வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய எட்டு நாட்கள் திருவிழா இன்று அம்மன் மலர் விமான பல்லக்கு பவனியுடன் துவங்குகிறது. வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவுக்காக ஏப்.,18 ல் கொடிக்கம்பம் நடப்பட்டது. மே 7 வரை தினமும் சிறப்பு பூஜை, அம்மன் வீதியுலா, மண்டக படி எழுந்தருளல் நடந்தது.
இன்று மலர் விமான பவனி: இன்று மாலை 5:00 மணிக்கு திருவாபரணப் பெட்டி கோயிலுக்கு எடுத்து வரப்பட்டு, அபிஷேகம் செய்யப்பட உள்ளது. இரவு 11:00 மணிக்கு அம்மன் வீதி உலா மண்டகப்படி எழுந்தருளல் நடக்கிறது.நாளை அதிகாலை 3:00 மணிக்கு மின் அலங்கார மலர் விமான பல்லக்கில் அம்மன் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்க உள்ளது. மே 9ல் முத்துப்பல்லக்கு பவனியும், மே 10 முதல் 14 வரை தேரோட்டம் நடைபெறும். மே 14ல் அம்மன் முத்துச்சப்பர பல்லக்கில் திருத்தேர் தடம் பார்த்தல் நிகழ்வும் நடக்க உள்ளது. மே 15ல் திருவாபரணப் பெட்டிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படும். பின், அம்மன் பூஞ்சோலை செல்லுதலுடன் விழா நிறைவு பெறும். கோயில் வளாகத்தில் பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள், பாதுகாப்பு அம்சங்கள் குறித்து கலெக்டர் பல்லவிபல்தேவ் ஆய்வு செய்தார். டி.ஆர்.ஓ., கந்த சாமி, வீரபாண்டி பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார், வீரபாண்டி கோயில் செயல் அலுவலர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.