ராமேஸ்வரம், தனுஷ்கோடியில் இடியும் நிலையில் உள்ள விநாயகர் கோயிலை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. 1964க்கு முன் தனுஷ்கோடியில் பக்தர்கள் புனித நீராடி விட்டு அங்குள்ள விநாயகர் கோயிலில் தரிசித்த பிறகு, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் தீர்த்தத்தில் நீராடி தரிசனம் செய்வர். 1964ல் ஏற்பட்ட புயலில் பழமையான தனுஷ்கோடி விநாயகர் கோயில் மற்றும் சர்ச், பல கட்டடங்கள் சேதமடைந்த நிலையில், கடந்த 54 ஆண்டுகளாக கம்பீரமாக நிற்கிறது. இங்குள்ள கோயில், சர்ச், தபால் நிலைய கட்டடங்களை பழமை மாறாமல் புதுப்பித்து, ஒலி-ஒளி காட்சியுடன் பொழுது போக்கு அம்சம் ஏற்படுத்தப்படும் என இரு ஆண்டுக்கு முன்பு மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது. ஆனால் இதுநாள் வரை கோயில், சர்ச் உள்ளிட்ட கட்டடங்களை புதுப்பிக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்காததால், தொல்லியியல் துறையும் கண்டுகொள்ளவில்லை. இந்நிலை நீடித்தால் உப்பு காற்றில் கோயில், சர்ச் முழுவதும் இடிந்து விழும் அபாயம் உள்ளதால், தனுஷ்கோடி தனது அடையாளத்தை இழக்கும் நிலை உள்ளது. எனவே கோயில், சர்ச் பழமை மாறாமல் புதுப்பிக்க மாநில அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் தெரிவித்தனர்.