பதிவு செய்த நாள்
13
ஜன
2012
10:01
கும்பகோணம் : திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோவிலில் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் உருவாகியுள்ள, அம்பாள் தேர் வெள்ளோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர். கும்பகோணம் அருகே திருவிடைமருதூரில் திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான, பெருநலமாமுலையம்மை உடனாய மகாலிங்க பெருமான் கோவில் உள்ளது. மிகவும் பழமையும், பெருமையும் வாய்ந்த இங்கு, தேரோட்டம் பிரசித்தி பெற்றது. தேரோட்டம் நடைபெறாமல் நின்று, பல ஆண்டுக்கு பின், 2007ம் ஆண்டு, மகாலிங்கசுவாமி சேவா அறக்கட்டளை துவக்கப்பட்டு, தேர்த் திருப்பணி துவங்கப்பட்டது. அப்போது, பக்தர்களின் நன்கொடை மூலம், 5 கோடி ரூபாய் மதிப்பில், அனைத்து தேர் திருப்பணிகள் செய்துவிட திட்டமிடப்பட்டது. அதன்பின், முதலில் தேரடி விநாயகர் கோவில் திருப்பணி செய்யப்பட்டு, கும்பாபிஷேகம் நடந்தது. இதில், ஐந்து தேரடி மண்டபங்களும், திருப்பணி செய்யப்பட்டன. 2010ம் ஆண்டில், தேர் வெள்ளோட்டம் விடப்பட்டது. 2011ம் ஆண்டின், தைப்பூச பெருவிழாவில், சுவாமி தேரோட்டம், அதி விமரிசையாக நடந்தது. இந்த ஆண்டுக்கான தேர்த் திருப்பணி பணி நிறைவுற்ற நிலையில், நேற்று அம்பாள் தேர் வெள்ளோட்டம் நடந்தது.தேருக்கு சிறப்பு அபிஷேகங்கள், சிறப்பு கட அபிஷேகம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, தேர் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.