சபரிமலை : அம்பலப்புழா, ஆலங்காடு பக்தர்களின் பேட்டைத்துள்ளலுடன் எருமேலி பேட்டைத்துள்ளல் நிறைவு பெற்றது. இன்று பந்தளத்தில் இருந்து திருவாபரணம் புறப்படுகிறது.சபரிமலையில் மகரவிளக்கு பெருவிழா வரும் 15-ம் தேதி நடைபெறுகிறது. மகரவிளக்குக்கு முன்னோடியாக எருமேலியில் நடைபெறும் அம்பலப்புழா, ஆலங்காடு பக்தர்களின் பேட்டைத்துள்ளல் பிரசித்தி பெற்றது. இந்த பேட்டைத்துள்ளலுக்கு பின்னர் எருமேலியில் பேட்டைத்துள்ளல் நடைபெறாது. அதன் படி நேற்று பகல் 12. 30 மணியளவில் ஆகாயத்தில் வட்டமிட்ட கருடனை கண்டதும் அம்பலப்புழா பக்தர்கள் பேட்டைத்துள்ளல் தொடங்கினர். இவர்கள் எருமேலி சிறிய சாஸ்தா கோயிலில் இருந்து நெற்றிப்பட்டம் கட்டிய யானையுடன் வந்த இவர்கள் வாவர் பள்ளிக்கு சென்றனர். அங்கிருந்து பள்ளி நிர்வாகிகளுடன் பேட்டை துள்ளி பெரிய சாஸ்தா கோயிலுக்கு சென்றனர். மாலை மூன்று மணிக்கு ஆகாயத்தில் தெரிந்த நட்சத்திரத்தை கண்டதும் ஆலங்காடு பக்தர்கள் பேட்டை துள்ளல் தொடங்கினர். இவர்கள் வாவர் பள்ளிக்கு செல்லவில்லை. நேராக பெரிய சாஸ்தா கோயிலுக்கு சென்றனர். இந்த பேட்டை துள்ளல்களுடன் பேட்டைத்துள்ளல் நிறைவு பெற்றது. திருவாபரணம்: பந்தளம் மன்னர் வழங்கிய திருவாபரணங்கள் மகரவிளக்கு நாளில் ஐயப்பனுக்கு அணிவிக்கப்படுகிறது. இந்த திருவாபரணங்கள் இன்று அதிகாலை ஐந்து மணி முதல் பகல் 12 மணி வரை பந்தளம் பெரியக்கோயில் சாஸ்தா கோயிலில் பக்தர்கள் தரிசனத்துக்காக வைக்கப்படுகிறது. அதன் பின்னர் பேடகங்களில் அடைக்கப்பட்டு திருவாபரண பவனி புறப்படும். இந்த பேடகங்களை கங்காதரன், சிவன், பிரதாபன் என மூன்று பக்தர்கள் எடுத்து வருகின்றனர். இன்று அயிரூர் புதியகாவு கோயிலிலும், நாளை ளாகா சத்திரத்திலும் தங்கும் இந்த பவனி 15-ம் தேதி மாலையில் சன்னிதானம் வந்தடையும். சுத்திகிரியைகள்: மகரவிளக்குக்கு முன்னோடியாக சன்னிதானத்தில் நடைபெறும் சுத்திகிரியைகள் இன்று தொடங்குகிறது. இன்று மாலை தீபாராதனைக்கு பின்னர் பிரசாத சுத்தி பூஜைகளும், நாளை உச்சபூஜைக்கு முன்னதாக பிம்பசுத்தி பூஜைகளும் தந்திரி கண்டரரு மகேஸ்வரரு தலைமையில் நடைபெறும்.