பதிவு செய்த நாள்
14
மே
2018
12:05
பொள்ளாச்சி; அமாவாசையை முன்னிட்டு, ஆனைமலை மாசாணியம்மன் கோவிலுக்கு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில், சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோவில், புகழ் பெற்ற ஆன்மிக தலமாகும். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து அம்மனை தரிசிக்க அதிகளவில் பக்தர்கள் வருவர். அமாவாசை அன்று மாசாணியம்மனை தரிசிப்பது விசேஷம் என்பதால், முந்தைய நாள் முதலே பக்தர்கள் வருகை அதிகமிருக்கும். நாளை (15ம் தேதி) அமாவாசை என்பதால் மாசாணியம்மன் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் வசதிக்காக, அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் கூடுதலாக, 20 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. கோடை விடுமுறை காலம் என்பதால், வழக்கத்தை விட பயணிகள் கூட்டம் அதிகமிருக்கும். அதைக் கருத்தில் கொண்டு, இன்று இரவு, 7:00 மணி முதல், நாளை இரவு வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. பக்தர்கள் கூட்டத்தை பொறுத்து பஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரயில்களிலும் பக்தர்கள் வருகை இருக்கும் என்பதால், ரயில் நேரத்தையொட்டி, ரயில்வே ஸ்டேஷனில் இருந்து ஆனைமலை மாசாணியம்மன் கோவிலுக்கு செல்லும் வகையில் கூடுதல் பஸ்கள் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.