பதிவு செய்த நாள்
14
மே
2018
01:05
திருத்தணி: திருத்தணி ஒன்றியம், எஸ்.அக்ரஹாரம் கிராமத்தில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில், தீமிதி திருவிழா, கடந்த மாதம், 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும், மூலவருக்கு சந்தன காப்பு, மதியம், மகாபாரத சொற்பொழிவு, இரவு நாடகம் மற்றும் உற்சவர் அம்மன் வீதியுலா வந்தது.இந்நிலையில், நேற்று, காலை, 10:00 மணிக்கு, 18ம் நாளில், கோவில் வளாகத்தில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, கோவில் வளாகத்தில் எஸ்.அக்ரஹாரம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து திரளான பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.காலை, 11:50 மணிக்கு, அக்னி குண்டத்தில் தீ முட்டும் நிகழ்ச்சியும், மாலை, 6:30 மணிக்கு பூகரகம் ஊர்வலத்துடன், 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து, தீமிதித்தனர். அப்போது, அங்கு கூடியிருந்த பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என, பக்தி முழக்கமிட்டனர். பின், வாண வேடிக்கைகள், உற்சவர் திரவுபதியம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று, காலை, 11:00 மணிக்கு, தர்மர் பட்டாபிஷேகம் நடக்கிறது.