பதிவு செய்த நாள்
14
மே
2018
01:05
தையூர்: பக்தர்கள் அதிகம் வரும் தையூர், செங்கண்மாலீஸ்வரர் கோவில் மற்றும் கொளத்துார் கல்யாண ரங்கநாத பெருமாள் கோவில்களில், பிரார்த்தனை காணிக்கை செலுத்த, உண்டியல் வைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துஉள்ளது. இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள, பிரசித்தி பெற்ற கோவில்களாக, கேளம்பாக்கம் அடுத்த தையூர் செங்கண்மாலீஸ்வரர் கோவில் மற்றும் கொளத்துார் கல்யாண ரங்கநாத பெருமாள் கோவில் விளங்குகின்றன. பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள செங்கண்மாலீஸ்வரர் கோவிலுக்கு, தினமும், நுாற்றுக்கணக்கான பக்தர்களும், பிரதோஷம், பவுர்ணமி மற்றும் விழா நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்களும் வருகின்றனர். இவ்வாறாக வரும் பக்தர்கள், தங்களின் பிரார்த்தனை காணிக்கைகளை செலுத்த, உண்டியல் இல்லாததால் சிரமப்படுகின்றனர். உண்டியல் வைக்கவும், அர்ச்சனை மற்றும் அபிஷேகங்களுக்கு கட்டணம் வசூலிக்கவும், பணியாளர் ஒருவரை நியமிக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இதே போல, 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த, புகழ்பெற்ற கொளத்துார் கல்யாண ரங்கநாத பெருமாள் கோவிலிலும் காணிக்கை உண்டியல் வைக்க, அறநிலையத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.