பதிவு செய்த நாள்
15
மே
2018
11:05
திருப்புத்துார்: திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயில் விமானத்திருப்பணி 11 ஆண்டுகளாகியும் முழுமை பெறாமல் திருப்பணி நின்றது பக்தர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயில் 108 வைணவத்தலங்களில் முதன்மையானது. பாடல் பெற்ற தலம். ஸ்ரீராமானுஜர் பக்தர்களுக்கு மந்திர உபதேசம் செய்த தலம். சிவகங்கை சமஸ்தானத்திற்குட்பட்ட இக்கோயிலுக்கு ஆண்டு தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். இக்கோயிலின் மூலவருக்கு அமைக்கப்பட்டுள்ள அஷ்டாங்க விமானம் சிறப்பு மிக்கது. 96 வகையான வைணவ விமானங்களில் முதன்மையானது. திருமாலின் 108 திருப்பதிகளில் சில கோயில்களில் மட்டுமே அஷ்டாங்க விமானம் உள்ளது. தமிழகத்தில் உத்திரகோசமங்கை, கூடழலகர், திருக்கோஷ்டியூர் ஆகிய 3 கோயில்களில் மட்டுமே இந்த விமானம் உள்ளது.
விமான தங்கத் தகடு திருப்பணி: இக்கோயிலின் அஷ்டாங்க விமானம் ஓம் நமோ நாராயணாய எனும் மூன்று சொற்களை உணர்த்தும் விதமாக மூன்று தளங்களாக உள்ளது. கீழ் தளத்தில் நர்த்தன கிருஷ்ணர்,(பூலோக பெருமாள்),.முதல் தளத்தில் முதல் அடுக்கில் ஆதிசேஷன் மீது சயனகோலத்தில் சவுமியநாராயணர் (திருப்பாற்கடல் பெருமாள்) இரண்டாவது அடுக்கில் நின்ற கோலத்தில் உபேந்திர நாராயணர்(தேவலோக பெருமாள்), மூன்றாம் அடுக்கில் அமர்ந்த கோலத்தில் பரமபதநாதர்(வைகுண்ட பெருமாள்) என சுவாமி நான்கு நிலைகளில் அருளுகிறார்.90 அடி உயரம் வரை கல் திருப்பணியாலும், தொடர்ந்து சுதை வேலைப்பாடுகளுடன் சேர்த்து 135 அடி உயரமுடையது. இந்த சிறப்பு மிக்க விமானத்திற்கு சிவகங்கை சமஸ்தானம், சவுமியநாராயண எம்பெருமானார் சாரிடபிள் ட்ரஸ்ட்,கிராமத்தினர் மற்றும் உபயதாரர்கள் தங்கத் தகடு வேய முடிவெடுத்தனர். பாலாலயம் நடந்து திருப்பணி துவங்கியது. சுதை வேலைப்பாடுகளில் தாமிரத்தகடு பொருத்தும் பணி மிகவும் மெதுவாக நடந்து பணிகள் நின்றன. 2017 ஜூனில் மீண்டும் துவங்கிய விமான திருப்பணி சில மாதங்களில் நின்று போனது. திருப்பணிக்காக பல முறை சாரம் கட்டுவதும், பிரிப்பதுமாக உள்ளது. தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோயில் திருப்பணியும் துவங்கியது. துவங்கிய திருப்பணி சில காரணங்களால்நின்று போனது.
கோயிலுக்கு வரும் பக்தர்கள் விமானத்தின் சுதை சிற்பங்கள் இல்லாமல் உள்ளதையும், சிவன், அனுமார்,ஆழ்வார்கள்,கண்ணன் சிலைகள் பல ஆண்டுகளாக துணியால் மூடப்பட்டுள்ளதை நினைத்து வருந்துகின்றனர். சமூக ஆர்வலர்தியாகராஜன் கூறுகையில், 11 ஆண்டுகளாகியும் விமான திருப்பணியும், கோயில் திருப்பணியும் முழுமை பெறாமல் தடைபட்டு நின்று விட்டது. இதனால் போதிய மழை பெய்யாமல் வறட்சி ஏற்பட்டுள்ளதாக மக்கள் வருந்துகின்றனர்.எனவே சிவகங்கை சமஸ்தானம், திருப்பணிக்குழுவினர், கிராமத்தினர்,உபயதாரர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். சமஸ்தானத்தினர் திருப்பணிக்கான காலத்தை நிர்ணயிக்க வேண்டும். மேலும் நிதிநிலைக்கேற்ப திருப்பணிகளை திட்டமிட்டு வரையறுத்துக் கொள்ள வேண்டும். வெளிப்படையான அணுகுமுறை அவசியம். அடுத்த தெப்பத்திற்குள் திருப்பணி நிறைவு செய்ய வேண்டும் என்றார்.