காரைக்கால்: திருநள்ளார் சனி பகவான் கோவிலில் ரூ.4.50 கோடி மதிப்பில் தங்கத் தேர் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. காரைக்கால் திருநள்ளாரில் பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் அமைந்துள்ளது. நவக்கிரக ஸ்தலங்களில் சனி பரிகார ஸ்தலமாக திருநள்ளார் விளங்குகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர். பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்ற, நன்கோடை உதவியுடன் கோவில் நிர்வாகம் சார்பில், 8 கிலோ தங்கம் மூலம் ரூ.4.50 கோடி மதிப்பில், தங்க தேர் செய்யும் பணி கடந்த சில நாட்களுக்கு முன்பு துவங்கியது. முதல் கட்டமாக தேர் செய்யப்பட்டு, அதன் முன் பக்கத்தில் இரண்டு குதிரை வாகனங்கள் அழகிய வடிவில் செய்யப்பட்டுள்ளன. இது குறித்து கோவில் நிர்வாக அதிகாரி விக்ராந்தராஜா கூறுகையில், திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலுக்கு பல ஆண்டுகளாக தங்கரதம் செய்யவேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதையடுத்து, கோவில் நிர்வாகம் சார்பில், பக்தர்கள் நன்கோடை மூலம், தங்கரதம் செய்யும் பணி கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கப்பட்டது. பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் அனைத்து பணிகளும் முடிக்கப்படும் என தெரிவித்தார்.