** குன்றாறும் குடிகொண்ட முருகா... பக்தர் குறை தீர்க்கும் வள்ளல் நீ அல்லவோ!
* ஆறுபடை வீடுகளில் அருள் புரியும் ஆறுமுகனே! அகத்திய முனிவருக்கு உபதேசித்த குருநாதனே! ஈசனின் நெற்றிக்கண்ணில் அவதரித்த பாலனே! கார்த்திகைப்பெண்களின் அன்பில் வளர்ந்த காங்கேயனே! வள்ளிக்கு வாய்த்தவனே! தவசீலர்களின் நெஞ்சில் குடியிருக்கும் தவமணியே! பச்சைமயிலில் பவனி வரும் பரம்பொருளே! உன் திருவடிகளைச் சரணடைகிறோம்.
* ஞான தண்டாயுதபாணியே! செந்தூரில் வாழும் வேலவனே! பழநி மலையில் வீற்றிருப்ப வனே! குன்று தோறும் குடியிருக்கும் குமரக்கடவுளே! முத்தமிழில் வைதாரையும் வாழ வைக்கும் வித்தகனே! கருணாகரனே! உன் பாதமலர்களை தஞ்சம் என வந்து விட்டோம் ஏற்றுக்கொள்வாயாக.
* தந்தைக்கு மந்திரத்தை உபதேசித்தவனே! கார்த்திகேயனே! வெற்றி வேலாயுத மூர்த்தியே! தேவர்களுக்கு வாழ்வளித்த தேவசேனாபதியே! தெய்வானை மணவாளனே! திருமாலின் மருமகனே! அருணகிரிக்கு அருள் செய்த ஆறுமுகனே!
* சிவபார்வதியின் செல்வ மகனே! தணிகாசலனே! சங்கரன் புதல்வா! கதிர்காமம் வாழும் கதிர்வேலனே! கந்தனே! கடம்பனே! சூரபத்மனுக்கு வாழ்வளித்த வள்ளலே! வள்ளி மண வாளனே! வாழ்வில் குறுக்கிடும் துன்பங்களைப் போக்கி நல்வழி காட்டியருள வேண்டும்.
* சரவணப்பொய்கையில் உதித்தவனே! பழநியாண்டவனே! சக்தி உமைபாலனே! முத்தமிழ் வித்தகனே! சுவாமி நாதனே! உன் திருவருளால் உலக உயிர்கள் எல்லாம் நலமுடன் வாழ வேண்டும்.
* தாமரை ரகசியம் முருகனின் துணைவியரான வள்ளியின் கையில் தாமரையும், தெய்வானையின் கையில் நீலோற்பலம் மலரும் இருக்கும். முருகனுக்கும் சிவனைப் போல மூன்று கண்கள் உண்டு. இவை சந்திரன், அக்னி மற்றும் சூரியன். இந்தக் கண்கள் எப்போதும் மூடுவதில்லை. இமைக்காமல் பக்தரை காப்பவர் முருகன். அவரது சூரியக்கண், வள்ளியின் கையிலுள்ள தாமரையைப் பார்ப்பதால், அது எப்போதுமே மலர்ந்திருக்கிறது. சந்திரக்கண் தெய்வானையின் கையிலுள்ள நீலோற்பலம் மலரைப் பார்ப்பதால் அதுவும் மலர்ந்திருக்கிறது. இவ்வாறு மலர்ந்த பூக்களைப் போல, முருகனை வணங்குவோரின் வாழ்வு மலர்ந்திருக்கும். அவர்களது செயல்பாடுகள் யாவும் வெற்றி பெறும்.
*விதியை வெல்லும் வழி படைப்புக்கு ஆதாரமான ஓம் மந்திரத்திற்கு பொருள் தெரியாத பிரம்மாவை சிறையிலிட்டார் முருகன். பிறகு, தானே படைப்பு தொழிலை தொடங்கினார். அவரால் படைக்கப்பட்ட உயிர்கள் எல்லாம் பாவமின்றி பிறந்ததால், எமனால் உயிர்களை கொல்ல முடியவில்லை.
இதன் அடிப்படையில் முருகனை வழிபடுவோருக்கு மரண பயம் நீங்கும். வந்த வினையும் வருகின்ற வல்வினையும் கந்தனென்று சொல்லக் கலங்கிடுமே செந்தில் நகர் சேவகா என்று திருநீறு அணிவார்க்கு மேவ வராதே வினைஎன்ற பாடலை தினமும் பக்தியுடன் பாடினால் விதியை வெல்லும் ஆற்றல் உண்டாகும்.