பதிவு செய்த நாள்
29
மே
2018
12:05
திருத்தணி: திருத்தணி முருகன் கோவில் குடில்கள் மற்றும் அறைகளை, ஆன்லைன் மூலம் பதிவு செய்வதில் அடிக்கடி குளறுபடி ஏற்படுகிறது. ‘சர்வர்’ பழுது மற்றும் இடைத்தரகர்களால் உண்மையான பக்தர்களுக்கு அறைகள் கிடைக்காமல் அவதி ஏற்படும் நிலை காணப்படுகிறது. திருத்தணி முருகன் கோவிலுக்கு தினமும் தமிழகம் உள்பட அண்டை மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, முருகப்பெருமானை தரிசித்து செல்கின்றனர்.
பக்தர்கள் வசதிக்காக, கோவில் நிர்வாகம், தணிகை இல்லம், கார்த்திகேயன் இல்லம் மற்றும் சரவணப்பொய்கை ஆகிய மூன்று இடங்களில் குடில்கள் மற்றும் அறைகளை குறைந்த வாடகைக்கு விடுகிறது. அந்த வகையில், தணிகை இல்லத்தில், 39 குடில்கள், 48 அறைகள்; கார்த்திகேயன் இல்லத்தில், 52 குடில்கள், 48 அறைகள்; சரவணபொய்கையில், 40 அறைகள் என, மொத்தம், 227 அறைகள் உள்ளன. இதில், குளிர்சாதன குடில்களுக்கு, 1,500 ரூபாய், சாதாரண குடில்களுக்கு, 900 ரூபாய், அறைகளுக்கு, 400 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
ஒன்றரை ஆண்டுக்கு முன் வரை, பக்தர்கள் அறை எடுப்பதற்கு திருத்தணிக்கு நேரில் வந்து அந்தந்த தேவஸ்தான இல்லத்திற்கு வந்து தான் அறை எடுக்க வேண்டியிருந்தது. மேலும், அதற்காக, முன்பதிவு செய்ய வேண்டியிருந்தது. இதையடுத்து, கோவில் நிர்வாகம், ஆன்லைன் மூலம் மேற்கண்ட அறைகளுக்கு, முன்பதிவு செய்யும் திட்டத்தை செயல்படுத்தியது.
இதன் மூலம் தணிகை இல்லம் மற்றும் கார்த்திகேயன் இல்லம் ஆகிய இடங்களில் உள்ள குடில்கள் மற்றும் அறைகளுக்கு, பக்தர்கள் பதிவு செய்யும் வசதி மட்டும் ஏற்படுத்தப்பட்டது. இதனால், பக்தர்கள் எளிதாக இணைய தளம் மூலம் தங்களுக்கு தேவையான குடில், அறைகளை முன்பதிவு செய்து, கோவில் வந்து தங்கி செல்கின்றனர். பக்தர்கள் அறைகள் முன்பதிவு செய்வதற்கு வசதியாக, 29 நாட்களுக்கு முன் கூட, அறைகள், குடில்கள் முன்பதிவு செய்யும் வசதி கோவில் நிர்வாகம் செய்து கொடுத்துள்ளது. மேலும், ஆன்–லைன் மூலம், அறைகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதா என்ற நிலவரமும் தெரிந்து கொள்ளலாம். ஆனால், சில மாதங்களாக கோவில் அறைகள் முன்பதிவு செய்யும் இணையதள பக்கத்தில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. அதாவது, சர்வர் பழுது என, அவ்வப்போது தெரிவிக்கப்படுகிறது. மேலும், 29 நாட்கள் முன், அறைகள், குடில்கள் முன்பதிவு செய்யலாம் என்ற நிலையில், அதற்கான பதிவுகள், சில மணி நேரங்களில் முடிந்ததாக தகவல் கிடைக்கிறது.
இதனால், உண்மையான பக்தர்கள் அறைகள் கிடைக்காமல் பரிதவிக்கின்றனர். இது குறித்து பக்தர்கள் சிலர் கூறியதாவது: கோவில் அறைகளை முன்பதிவு செய்வதற்கு, 29 நாட்கள் அவகாசம் கொடுத்து இணையதளத்தில் அறைகள் நிலவரம் வெளியிடப்படுகிறது. ஆனால், சமீப காலமாக, ஆரம்பித்த முதல் நாளிலேயே, அனைத்து அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன என, இணையதளத்தில் காண்பிக்கப்படுகிறது. ஒரே நாளில், அனைத்து அறைகளும் இதுவரை பதிவு செய்தது கிடையாது. அனைத்து அறைகளும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதற்கு காரணம், சில இடைத்தரகர்கள் தான். அரசியல் கட்சி பிரமுகர்கள் தங்களது ஆதரவாளர்களுக்கு அறைகள், குடில்கள் தர வேண்டும் என, கோவில் நிர்வாகத்திடம் நிர்பந்தம் செய்வதால், வேறு வழியில்லாமல் அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது போல காண்பிக்கப்படுகிறது. மேலும், ஆன்லைன் மூலம் பதிவு செய்யும், சர்வரில் குளறுபடி செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதால், இதுபோன்ற நிகழ்வுகள் நடக்கிறது. இதனால், உண்மையான பக்தர்கள் அறைகள் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.