பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து வந்த சேவுகப்பெருமாள் அய்யனார் தேர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29மே 2018 12:05
சிங்கம்புணரி : சிங்கம்புணரியில் பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து வந்த சேவுகப்பெருமாள் அய்யனார் கோயில் தேரோட்டத்தில் நேர்த்திக்கடனாக ஏராளமான தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது. இக்கோயிலின் வைகாசி விசாகத்திருவிழா மே 20ல் கொடியேற்றதுடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் சுவாமி வெவ்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மே 24 ல் திருக்கல்யாணமும், 25ல் கழுவன் திருவிழாவும், 27ல் புரவியெடுப்பும் நடந்தது. நேற்று தேரோட்டம் நடந்தது. காலை 10:00 மணிக்கு பூரணை புட்கலையுடன் சேவுகப்பெருமாள் அய்யனார் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
மாலை 3:45 மணிக்கு நாட்டார்கள் சந்திவீரன் கூடத்தில் இருந்து ஊர்வலமாக கோயில் வாசல் வந்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.இதைத்தொடர்ந்து பக்தர்கள் தேர் இழுத்தனர். மாலை 4:05 மணிக்கு புறப்பட்ட தேர் மாலை 5:10 க்கு நிலையை அடைந்தது. தேர் நிலையை அடைந்ததும் ஏராளமான பக்தர்கள் தேங்காய்களை தேரடிப்படிகளில் வீசி உடைத்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று பூப்பல்லக்கு உற்ஸவம் நடக்கிறது.