உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவில் பெரியநாயகி அம்மனுக்கு ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் மழை வேண்டியும், உலக நன்மைக்காகவும் பூச்செரிதல் விழா பக்தர்களால் நடத்தப்படும். இதன்படி இந்த ஆண்டு பூச்செரிதல் விழா நேற்று நடந்தது. தஞ்சை பெரிய கோவில் வளாகத்தில் உள்ள நால்வர் மண்டபத்தில் இருந்து இருந்து ரோஜாப்பூ, நாகலிங்க பூ, முல்லை பூ, மருக்கொழுந்து, மருவூ, ஜாதிப்பூ, மகிழம்பூ, தாழம்பூ, தாமரை பூ, மந்தாரப்பூ, அல்லிப்பூ, செண்கப்பூ, பாரிஜாதப்பூ, செம்பருத்தி, சாந்தினிபூ, மருதாணிப்பூ, மனோரஞ்சிதம் பூ, சம்பங்கி, சாமந்தி, பவளமல்லி, அரளிப்பூ, வெட்டிவேர் உள்ளிட்ட 51 வகையான மலர்கள் எடுத்து வரப்பட்டது. கோவிலை சுற்றி பக்தர்கள் வலம் வந்த பின்னர் ஆயிரத்து 500 கிலோ எடைகொண்ட மேற்கண்ட பூக்களால் பெரியநாயகி அம்மன் அலங்காரம் செய்யப்பட்டார். இதை தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.