பதிவு செய்த நாள்
31
மே
2018
12:05
தஞ்சை பெரிய கோவிலில், 60 ஆண்டுகளுக்கு முன் திருடு போன சிலைகள் மீட்கப்பட்டன. தஞ்சை பெரிய கோவில் காப்பகத்தில் இருந்த, 1,000 ஆண்டுகள் பழமையான, 75 செ.மீ., உயரமுள்ள ராஜராஜசோழன் மற்றும் பட்டத்து இளவரசியான அவரது மனைவி, உலகமாதேவி சிலைகள் உட்பட, 66 சிலைகள், 60 ஆண்டுகளுக்கு முன், திருடு போயின. இதுகுறித்து, முன்னாள், எம்.பி., சுவாமிநாதன், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசில் புகார் தெரிவித்தார். இதேபோன்று, பல வரலாற்று ஆய்வாளர்களும், ஆதாரத்துடன் புகார் அளித்தனர். இதுகுறித்து, மாநில சிலை கடத்தல் தடுப்பு பிரிவு, ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் தலைமையிலான போலீசார், விசாரித்தனர். அப்போது, இந்த சிலைகள் திருடுபோனது பற்றி, கோவிலை நிர்வகித்து வரும், அறநிலையத்துறை அதிகாரிகள், போலீசில் புகார் அளிக்காமல் இருந்தது, சந்தேகத்தை ஏற்படுத்தியது.
மார்ச், 2ல், தஞ்சை மேற்கு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சிலை கடத்தல் தொடர்பாக, ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் தலைமையிலான போலீசார், பல கோணங்களில் விசாரணை நடத்தினர். அப்போது, தஞ்சை பெரிய கோவிலில் இருந்து திருடுபோன, ராஜராஜ சோழன், உலகமாதேவி பஞ்சலோக சிலைகள், சென்னையில், கவுதம் சாராபாய் என்பருக்கு, பல கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டது தெரிய வந்தது. இதற்கு, தஞ்சை மாவட்டம், கபிஸ்தலத்திற்கு அருகேயுள்ள, சறுக்கை கிராமத்தைச் சேர்ந்த, ராவ் பகதுார் சீனிவாச கோபாலாச்சாரி உடந்தையாக இருந்தது தெரிய வந்தது. மேலும், இந்த சிலைகள், குஜராத் மாநிலம், ஆமதாபாத்தில் உள்ள, சாராபாய் பவுண்டேஷனுக்கு சொந்தமான, ‘காலிகோ’ அருங்காட்சியகத்தில், பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. ஐ.ஜி., பொன் மாணிக்க வேல் தலைமையிலான போலீசார், இம்மாதம், 27ம் தேதி, அருங்காட்சியகத்தில் சோதனை நடத்தி, இரு சிலைகளையும் கைப்பற்றினர். இவற்றின் மதிப்பு, 150 கோடி ரூபாய்.
இது குறித்து, ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் கூறுகையில், ‘‘இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், 50 ஆண்டுகளாக, திருட்டு சம்பவத்தை மூடி மறைத்தனர். வரலாற்று ஆதாரங்களை திரட்டி, சாட்சிகளிடம் விசாரணை நடத்தி, சிலைகளை கண்டுபிடிப்பது, பெரும் சவாலாக இருந்தது. மீதமுள்ள சிலைகளையும் விரைவில் மீட்போம்,’’ என்றார்.