பதிவு செய்த நாள்
01
ஜூன்
2018
11:06
காஞ்சிபுரம் : அம்மனுக்கு மட்டுமே ஊற்றப்பட்டு வந்த கூழை, காஞ்சிபுரத்தில் வினோதமாக, பெருமாளுக்கும் வார்க்கும் பழக்கம் உள்ளது.காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், வைகாசி பிரம்மோற்சவத்தின், ஏழாம் நாள் உற்சவமான தேரோட்டம் நாளை நடைபெற உள்ளது. விழாவில், உள்ளூர், வெளியூர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர்.தேரோட்டத்தின் போது, நேர்த்திக்கடனாக புளியோதரை, பொங்கல், தயிர், சாம்பார், லெமன் உள்ளிட்ட பலவகை சாதங்களை பெருமாளுக்கு நைவேத்யம் செய்து, பக்தர்களுக்கு அன்னதானமாக வினியோகம் செய்யும் பழக்கம் உள்ளது.ஒரு சிலர், கோடை வெயிலுக்கு பக்தர்களுக்கு உடல் உஷ்ணத்தை குறைக்கும் வகையில் வாட்டர் பாக்கெட், மோர், ஜூஸ் உள்ளிட்ட குளிர்பானம் வழங்கி வருகின்றனர்.பெரும்பாலான, அம்மன் கோவில்களில், ஆடி திருவிழா உள்ளிட்ட திருவிழாவின் போது, அம்மனுக்கு கூழ் ஊற்றுவது வழக்கமாக உள்ளது. ஆனால், அம்மனுக்கு ஊற்றப்படுவது போல், காஞ்சிபுரத்தில், தேரில் பவனி வரும், வரதராஜ பெருமாளுக்கு, காஞ்சி புரம், லாரி சுமை ஏற்றி இறக்கும் தொழிலாளர்கள் கூழ் ஊற்றி வருகின்றனர்.இது குறித்து, காஞ்சிபுரம் மாவட்ட மகாத்மா காந்தி லாரி சுமை ஏற்றி, இறக்கும் தொழிலாளர் சங்கத் தலைவர், ஆர்.பழனி கூறியதாவது:கடந்த, 50 ஆண்டுகளுக்கும் மேலாக, கருட சேவை மற்றும் தேரோட்டத்தின் போது கூழ் ஊற்றி வருகிறோம். பலர், பல்வேறு வகையான உணவு வகைகளை வழங்கினாலும், நாங்கள் கோடை வெயிலுக்கு ஏற்ற வகையில், கூழ் ஊற்றி வருகிறோம்.இந்தாண்டு, 100 கிலோ கேழ்வரகு, 150 கிலோ நெய், 20 லிட்டர் தயிர், 50 கிலோ வெங்காயம் மூலம், கூழ் தயாரிக்கிறோம். கூழுக்கு தொட்டுக்கொள்ள, 100 கிலோ மாங்காய் ஊறுகாயும் செய் வழங்க உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -