பதிவு செய்த நாள்
18
ஜன
2012
11:01
சபரிமலை: மகரவிளக்குக்கு பின்னரும் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் நடை திறந்து அடைக்கும் நேரம் மீண்டும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. நேற்று ஐந்து மணி நேரம் வரிசையில் நின்று, பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். சபரிமலையில் இந்த மண்டல மகரவிளக்கு காலத்தில் வழக்கத்துக்கு மாறாக நடை திறந்து அடைக்கும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டிருந்தது. காலையிலும், மாலையிலும் 4 மணிக்கு பதிலாக தினமும் 3 மணிக்கு நடை திறக்கப்பட்டது. இரவில் 11 மணிக்கு பதிலாக 11.45 மணிக்கு அடைக்கப்பட்டது. மகரவிளக்கு முடிந்த நிலையில் மாதபூஜைகளுக்கு நடை திறப்பது போல 5 மணிக்கு மாற்றப்பட்டது. ஆனால் நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. 18 படியேறுவதற்கான வரிசை சரங்குத்தியை கடந்து மரக்கூட்டம் வரை நீண்டது. மகரவிளக்கு முடிந்ததால் உதயாஸ்தமன பூஜையும் அனுமதிக்கப்பட்டது. இந்த பூஜை நடைபெறும்போது, அடிக்கடி பக்தர்கள் தரிசனம் நிறுத்தப்பட்டது. இதனால் பக்தர்கள் மிகவும் சிரமப்பட்டனர். இதை தொடர்ந்து இன்றும், நாளையும் காலையில் 4 மணிக்கு நடை திறக்கும் என்றும், மாலையில் கூட்டத்தை பொறுத்து 3 அல்லது 4 மணிக்கு நடை திறக்கும் என்றும் தேவசம்போர்டு அறிவித்துள்ளது.
பந்தளம் மன்னர் வருகை: கடந்த 13ம் தேதி பந்தளத்தில் இருந்து திருவாபரண பவனி புறப்பட்ட போது பவனியுடன் வந்த பந்தளம் மன்னர் பிரதிநிதி ஹரிராமவர்மா பம்பையில் தங்கியிருந்தார். அவர் நேற்று சன்னிதானம் வந்தார். நெற்றிப்பட்டம் கட்டிய யானையுடன் சென்று தேவசம்போர்டு அதிகாரிகள் அவரை வரவேற்று அழைத்து சென்றனர். இன்று முதல் தினமும் காலையிலும், மாலையிலும் ஐயப்பன் தரிசனம் நடத்தும் இவரது முன்னிலையில் தான், 21ம் தேதி நடை அடைக்கப்படும்.
குமுளி பகுதி வெறிச்சோடியது: சபரி மலைக்கு தமிழகத்தில் இருந்து தேனி மாவட்டம் வழியாக சென்று வரும் பக்தர்கள் வெகுவாக குறைந்து காணப்பட்டதால், குமுளி, வண்டி பெரியாறு பகுதிகளில் வெறிச்சோடி காணப்பட்டது. சபரி மலை ஐயப்பன் கோவிலிலுக்கு தமிழகத்தின் வட மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி மாநிலங்களில் இருந்தும் வரும் பக்தர்கள் மதுரை, தேனி மாவட்டங்கள் வழியாகவும், கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் குமுளி, வண்டிப்பெரியாறு, புல்மேடு பகுதிகள் வழியாகவும் செல்வர். இவ்வாண்டு முல்லைப் பெரியாறு பிரச்னையால், தமிழக-கேரள எல்லை பகுதிகளில் பக்தர்கள் வெகுவாக பாதிப்பிற்கு உள்ளாகினர். இச் சம்பவத்தால், சபரி மலைக்கு தமிழகத்தில் இருந்து செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது. குமுளி, வண்டிப்பெரியாறு ஆகிய இடங்களில் மகரஜோதி தரிசன நிகழ்ச்சி முடிந்து லட்சக்கணக்கான பக்தர்கள் ஓய்வெடுப்பது வழக்கம். இவ்வாறு ஒரு வாரம் வரை இப்பகுதிகளில் பக்தர்கள் நிரம்பி கலகல வென காணப்படும். மேலும், கடும் போக்குவரத்து நெரிசல் இருக்கும். ஆனால், இப்பகுதிகளில் தரிசனம் முடிந்து பிறகு, 15, 16 தேதிகளில் பக்தர்களின்றி வெறிச்சோடி காணப்பட்டது. பக்தர்கள் வெகுவாக குறைந்து காணப்பட்டதால், இப்பகுதிகளில் வியாபாரமின்றி, வியாபாரிகள் தவித்தனர்.