விந்தியமலைத் தொடரில் மேய்கல்குன்றில் அமர்கண்டக் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து மூவாயிரத்து ஐநூறு அடி உயரத்தில் அமைந்துள்ளது. இங்குதான் இந்தியாவின் பிரம்மாண்ட நதிகளில் ஒன்றான நர்மதையின் உற்பத்தி ஸ்தானம் அமைந்துள்ளது! அமர்கண்டக் புண்ணியபூமி...! தேவர்களும், ரிஷிகளும் தவம் செய்து பலன் பெற்ற பூமி. * மார்க்கண்டேய முனிவர் * கபில முனிவர் * பிருகு முனிவர் * பிரபல கவிஞர் கபீர் ஆகியோர் இங்கு தவம் செய்துள்ளனர். * காளிதாசன் தன்னுடைய மேகதூதத்தில், அமர்கண்டக் பற்றிக் கூறியுள்ளான்! * நர்மதை இங்குதான் ஒரு குளத்தில் தன் பயணத்தைத் துவக்குகிறாள். சட்டிஸ்கர் மாநில மக்களின் ஜீவநாதமாக நர்மதை திகழ்வதால், அவளை மக்கள் பயபக்தியுடன் வணங்குகின்றனர்.
* நர்மதா மற்றும் சிவனுக்கு மாலையில் நடக்கும் ஆரத்தி ரொம்ப விசேஷம். * இதன் கரையில் கர்மகாரியங்கள்.... தான தர்மங்கள், வருடம் முழுவதும் நடக்கின்றன.
இனி நர்மதா நதி எப்படி உருவாயிற்று என பார்ப்போம். பிரம்மாவின் கண்களிலிருந்து விழுந்த இரு துளிகள்தான் நர்மதா மற்றும் சோனா! இரண்டும் ஒரே இடத்தில் உற்பத்தியானாலும், வெவ்வேறு திசைகளில் பயணிப்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயம்! மேகலன் என்ற அரசனின் மகள் நர்மதை! இவள் சோணபத்திரன் என்ற மாவீரனைக் காதலித்தாள். அவனோ..... கங்கை என்ற பெண்ணைக் காதலித்தான்! இருந்தும் அரசனுக்குத் தெரியவந்து, சோணபத்திரன் மிரட்டபட்டபோது, பயந்து நர்மதையை மணக்க முன் வந்தான்! இதே சமயம்... நர்மதையை, வேறு ஒரு முனிவரும் மிகவும் விரும்பினார்! இதனால் மன்னரிடம் முனிவர், நர்மதையை மணக்க அனுமதி கேட்டார்! அவன் மறுத்தான். உடனே அந்த தவமுனி இருவரையும் சபித்தான். இதன்படி அரசன் மலையானான். மகள் நர்மதையோ நதியானாள். இது நடந்தது ஆம்ரகண்டக்கில்...! அமர்கண்டக் என்றால் சிவனின் தொண்டை என ஒரு பொருள் உண்டு. அவரது கழுத்துப் பகுதியிலிருந்து பிறந்ததால் சிவகுமாரி! அதனால் சிவனை ஒட்டியே கோயில்! நர்மதா நதியைச் சுற்றி பரிக்கிரமா உண்டு. இது அமர்கண்டக்கில் ஆரம்பித்து அமர்கண்டக்கில் முடிவடைகிறது! பிரதட்சணமாக இந்த பரிக்கிரமா நடப்பதால் ஜலேரி என அழைக்கின்றனர்.
நர்மதையை வழிபடும் முன், ஆதி சங்கரரின் நர்மதாஷ்டகம் என்ற நூலைப் படிப்பது நல்லது. நர்மதாவும் சரி அலங்காரம் சரி எளிமை. சிலர் புடவை வாங்கி சாத்துகின்றனர். மற்ற நதிகளில் குளித்தால்தான் பாவம் போகும். ஆனால் நர்மதாவைப் பார்த்த மாத்திரத்திலேயே பாவங்கள் போய்விடும் என்கின்றன நமது புராணங்கள். நர்மதைக்கு முத்ரகன்யா மற்றும் அயோனிஜா என்ற சிறப்புப் பெயர்களும் உண்டு. ஆம்ரகண்டக் என அழைக்கப்படும் அமர்கண்டக்கில் மார்க்கண்டேய முனிவர் ஆசிரமம் உள்ளது. இதனைக் கடந்து சென்றால் மாயிபகீச்சா என்ற அற்புதத் தோட்டத்தைக் காணலாம். மூன்று கிலோமீட்டரில் கபிலதாரா உள்ளது. இது கபில முனிவர் தவம் செய்த இடம். இங்கு நூறடி உயரத்திலிருந்து நர்மதா நீர்வீழ்ச்சியாக விழுவது கண்கொள்ளாக் காட்சி! கபிலதாராவிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் தத்தாரா உள்ளது. இங்கு பத்தடி உயரத்திலிருந்து நர்மதா.... குதித்து ஓடுகிறாள்! சுற்றுச் சூழல் ரொம்ப அழகாக இருக்கும். நர்மதா குளத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் சோன்முடா என இரு இடம் உள்ளது. இங்குகிருந்துதான் சோனா நதி உற்பத்தியாகிறது. இந்து இடம் பார்க்க மிக அழகாக இருக்கும். இங்குகிருந்து சூரிய உதயம் பார்ப்பது கண்கொள்ளாக் காட்சி. அமர்கண்டக்கில் இரண்டு நாட்கள் தங்கினால் எல்லாவற்றையும் ஆற அமர ரசிக்கலாம்.
அமர்கண்டக் வர மிகச் சிறந்த மாதங்கள் - ஆகஸ்டு முதல் மார்ச் வரை. அமர்கண்டக் காடுகள் கன்யா தேசியப் பூங்காவைச் சார்ந்தவை.... இந்த பகுதி, வங்காள புலிகளுக்குப் பிரபலம், அருகிலேயே 40 கிலோ மீட்டரில் அசனா காட்டு விலங்குகள் சரணாலயம் உள்ளது. ஆக இவற்றையும் மனதில் கொண்டு இந்தப் பகுதியில் பயணிப்பது நல்லது! அமர்கண்டக் ஜபூல்பூரிலிருந்து 240 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. ரேவாவிலிருந்தும் வரலாம். ரயில் பாதையில் பெண்ட்ரா ரோடு ரயில் நிலையத்தில் இறங்கி, 40 கிலோ மீட்டர் பயணித்தும் இந்த இடத்தை அடையலாம்! இங்கு ஒரு யானை சிலை உள்ளது. அதற்குப் பூ கட்டி. சிலர் பூஜையும் செய்கின்றனர். இந்த யானையின் குறுக்கேயுள்ள இடைவெளி வழியாக பயணித்து வெளிவந்தால், வர இருக்கும் கஷ்டங்களும் விலகிவிடும் என நம்பிக்கை. இதேபோல் இங்கு ஒரு சுடுநீர் ஊற்று உள்ளது. துனிபானி என அழைக்கப்படும் இந்த சுடுநீரில் குளித்தால் சர்வரோகங்களும் விலகிவிடும் என்பது நம்பிக்கை!