பதிவு செய்த நாள்
04
ஜூன்
2018
01:06
நமது வேதங்கள் குறைபட்சம் பத்தாயிரம் வருடங்கள் பழமை வாய்ந்தவை என்பது அனைத்துத் தரப்பினரும் ஒத்துக் கொள்ளும் உண்மை. அந்த வேதங்களில், இன்றைய விஞ்ஞானிகளே ஆச்சரியப்படும் உண்மை. ப்ரபஞ்சம் பற்றிய விவரங்கள், பூமி மற்றும் இதர கிரகங்கள் சம்பந்தப்பட்ட விஞ்ஞானத் தகவல்கள், ஆணித்தரமான கருத்துக்கள், துல்லியமான மதிப்பீடுகள் கொடுக்கப்பட்டுள்ளன. பை-யின் மதிப்பு, ஒளியின் வேகம் பூமியின் வயது, உலகம் பற்றிய உண்மைகள், கலை, மருத்துவம், பொறியியல் என்று அது விளக்காத துறையேயில்லை, சொல்லாத விஷயமுமில்லை. ஒன்று இல்லை, நூற்றுக் கணக்கான அட்சய பாத்திரங்களைத் தன்னகத்தே வைத்துக் கொண்டு, தினந்தோறும் புதுப்புது உண்மைகளை வெளியிட்ட வண்ணம் இருக்கிறது.ஆனால் நம் நாட்டில் புத்திசாலிகள் கூட்டமொன்று, இவையெல்லாவற்றையும் புறம் தள்ளி விட்டு, முக்கியத்துவமில்லாத, சுவாரசியத்திற்காக அவை கூறும் சில விஷயங்களுக்குத் தேவையற்ற முக்கியத்துவம் கொடுத்து அவற்றின் அடிப்படையில் வேதங்களையே இகழ்கின்றனர். இந்த நிலையைப் பார்க்கும்பொழுது இந்தியர்களை அடிமைப்படுத்தி ஆளவேண்டுமென்றால், மிகவும் பெருமை வாய்ந்த அவர்களின் கல்வி முறை மேல் அவர்களுக்குள்ள நம்பிக்கையைக் குலைத்து, அதன்மேல் ஓர் அலட்சியம் வரவழைத்து, நம் கல்விமுறைதான் சிறந்தது என்று அவர்களை நம்ப வைக்க வேண்டும் என்ற தம் திட்டத்தில் மெக்காலே 100 சதவீதம் இல்லை 1000 சதவீதம் வெற்றி பெற்று விட்டதாகவே நினைக்கத் தோன்றுகிறது.
இந்த ஒரு சாரார், எல்லாவற்றையும் விட்டு விட்டு, கிருஷ்ணருக்கு 16, 108 மனைவிகள் என்ற விஷயத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, நம் தெய்வங்களை இழிவுபடுத்துவர். கிருஷ்ணருக்கு நரகாசுரவதத்திற்கு முன்பு வரை எட்டு மனைவியர் - அந்தக் காலத்தில் மன்னர்கள் பலதார மணம் புரிவர் (அவர்கள் சொல்லும் விஷயத்திற்கு நாம் கொடுக்கும் விளக்கம், இறுதியில் கிருஷ்ணரின் மதிப்பை உயர்த்துவதாகத்தான் இருக்கப் போகிறது). நல்ல விஷயங்களை விட்டுவிட்டு குப்பைகளைப் (சக்கை) பொக்கிஷமாக நினைப்பவர்களுக்குத் தகுந்த பதில்களைச் சொல்ல முடியும். நம் வேதங்கள் சொல்லும் முக்கியக் கருத்துக்களின் மூலமாகவே! இப்பொழுது விஞ்ஞானம் சொல்கிறது ஒளியின் வேகம் நொடிக்கு 1,86,000 மைல்கள் என்று, இதே விஷயம் நம் ரிக் வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. இது எத்தனை பேருக்குத் தெரியும்? தெரிந்தாலும் அதை ஒத்துக்கொள்ளும் மனப்பக்குவம், அதன் மேன்மையை அங்கீகரிக்கும் நியாய உணர்வு எத்தனை பேரிடத்தில் இருக்கிறது? ஏதோ தற்செயலாய், அப்படிச் சொல்லியிருக்கிறதே தவிர, அறிவுப்பூர்வமாக இதை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்றுதான் கட்சி கட்டுவர்.
கி.பி. 1675-ல் ரோமர் எனும் விஞ்ஞானி வியாழனின் சந்திரனான 10 -லிருந்து ஒளி பூமியை வந்தடையும் நேரத்தின் அடிப்படையில் ஒளியின் வேகத்தைக் கண்டு பிடித்துச் சொன்னார். அதற்கு முன்பு நியூட்டன் உட்பட அனைவரும் மிகவும் வேகமானது என்ற அளவில் தான் அது பற்றிப் பேசி வந்தனர்.
விஜயநகர மன்னர் புக்கர் 1 மந்திரி சபையைச் சேர்ந்த சயனர் (1315-1387) ரிக்வேதத்திற்கு உரை எழுதியுள்ளார். அதில் அவர் ரிக்வேதம் சொல்வதாகச் சொல்கிறார்- ஒளி அரை நிமிஷத்தில் 2202 யோஜனை தூரம் பயணிக்கிறது. அவர் சொல்லும் நிமிஷம். நமது இன்றைய நிமிஷத்திலிருந்து வேறுபட்டது. அவருடைய ஒரு நிமிஷம் எண்பது இன்றைய கணக்கில் 16/75.3 செகண்டு ஆகும். ஒரு யோஜனை = 9 மைல். இந்த அடிப்படையில் கணக்குப் போட்டுப் பார்த்தால் நமக்கு வரும் விடை இன்றைய அளவின்படி, ஒளி நமது செகண்டில் 1,86,536 மைல்கள் பயணிப்பதாகச் சொல்கிறது. எவ்வளவு துல்லியம்? இந்த விஷயம் சயனரின் உரையில், பிற்காலத்தில் இடைச்செருகல் செய்யப்பட்டு அவர் பெயரில் வந்திருப்பதாகச் சொல்ல வாய்ப்பே இல்லை. ஏனென்றால் மேக்ஸ்முல்லர் மேற்பார்வையில் இந்த உரை 1890 -ல் வெளிவந்தது. அதில் அவர் தெளிவாகச் சொல்லியுள்ளார். குறைந்தபட்சம் 4, 5 நூற்றாண்டுகள் முன்பு எழுதப்பட்டு, தனக்குக் கிடைத்த ஒரிஜினல் ஓலைச்சுவடிகளை அடிப்படையாக, ஆதாரமாக வைத்து தான் இந்த உரையைப் புதுப்பிப்பதாகச் சொல்கிறார். எனவே நிச்சயம் ஸயனரின் உரை ரோமர் விஞ்ஞானியின் காலத்திற்கு முந்தையதுதான் என்பதும் அதில் ஒளியின் வேகம் துல்லியமாகச் சொல்லப்பட்டிருப்பதும் யாராலும் மறுக்க முடியாத சத்தியம். இதுமட்டுமல்ல. பூமியின் வயது, அது அழியும் காலம் 8.64 பில்லியன் வருடங்கள் (1 மில்லியன் = 100 கோடி வருடங்கள்) என்று நம் விஞ்ஞானம் இன்று சொல்வதும் அந்தக் கணக்குகளும், வேதங்களில் சொல்லியிருப்பவற்றின் ஜெராக்ஸ் காப்பி மாதிரியே. இவற்றை எத்தனை நாள் மறுத்துக் கொண்டிருக்கப்போகிறோம்? நேற்று வரை விஞ்ஞானக் கற்பனை என்பவை. இன்று நடைமுறையில் வந்து விட்டன. வேதங்கள் சொல்பவைகளும், ஒப்புக் கொள்ளப்படும் காலம் வெகு தூரத்தில் இல்லை. அதுவரை பேசுபவர்கள் பேசிக் கொண்டே இருக்கட்டும்.