பதிவு செய்த நாள்
07
ஜூன்
2018
04:06
ராம பிரானின் பெருமையை உலகிற்கு எடுத்துக்காட்ட விரும்பிய துர்வாச முனிவர், ராமருக்கு ஒரு பரீட்சையை வைத்தார் என்று ஆனந்த ராமாயணத்தில் கூறப்பட்டுள்ளது. துர்வாசர் தன் அறுபதாயிரம் சிஷ்யர்களுடன் ஒருநாள் அயோத்திக்குச் சென்றார். ராமர், மனைவி, சகோதர பரிவாரங்களுடன் சென்று அவரைத் தன் மாளிகைக்கு அழைத்து வந்து, ஆசனம் அளித்து பூஜைகள் செய்து வணங்கினார். ராமரின் மரியாதையை ஏற்றுக்கொண்ட முனிவர், “ராமா! உனது உபசரிப்பைக் கண்டு மகிழ்வுற்றேன். இன்று ஓராண்டு காலம் விரதம் முடித்துள்ளேன். எங்களுக்கு ஒரு முகூர்த்த நேரத்திற்குள் போஜனம் செய்விக்கவும், தண்ணீர் பசு, அக்னியின் உதவி போன்றவற்றால் தயாரிக்கக்கூடாது. மேலும் எனது சிவபூஜைக்கு நீ தருவது, யாரும் பார்க்காத புஷ்பமாய் இருக்க வேண்டும். உன்னால் முடியுமா? இப்போதே சொல். இல்லையெனில் நான் கிளம்புகிறேன்...” என்றார். இது எப்படி சாத்தியம்? என்று அனைவரும் மலைத்து நிற்க, ராமன் புன்னகையுடன், “உங்கள் ஆணையை ஏற்றுக் கொள்கிறேன்” என்றார்.
துர்வாசமுனிவர், “சரயு நதிக்குச் சென்று தீர்த்தமாடி வருகிறேன்” என்று புறப்பட்டுச் சென்றார். எந்தவித பதட்டமும் இன்றி ராமர் ஒரு கடிதம் எழுதி, அம்பில் வைத்துக் கட்டி மேல் நோக்கி அந்த அம்பை எய்தார். அது இந்திரனிடம் போய்ச் சேர்ந்தது. இந்திரன் அந்தக் கடிதத்தைப் பிரித்துப் பார்த்தான். அதில் துர்வாசர் சொன்ன விவரங்களுடன்; கற்பக விருட்சத்தையும், பாரிஜாத மலரையும் ஒரு நொடியில் அனுப்புமாறு ஆணை இருந்தது. இதற்காக ராவணனை சம்ஹாரம் செய்த என் அம்புகளுக்காக காத்திராதே என எச்சரிக்கையும் இருந்தது. அதைப் படித்த இந்திரன் அக்கணமே தேவலோக விமானத்தில் கற்பக விருட்சத்தையும் பாரிஜாத மலரையும் அனுப்பிவைத்தான். இதற்குள் சரயு நதிக்குச் சென்றிருந்த முனிவர், சிஷ்யர்களுடன் திரும்பி வந்தார். ராமர், சீதா, லட்சுமணன் ஆகியோர் முனிவரை வணங்கி, பாரிஜாத மலரை அளித்து, சிவபூஜை செய்யும்படி வேண்டினர். பூஜை முடிந்தவுடன் சீதையையும் லட்சுமணரையும் உணவு பரிமாற உத்தரவிட்டார். ராமபிரான். சீதை கற்பக விருட்சத்தின் அடியில் பாத்திரங்களை வைத்து பிரார்த்திக்க, வித விதமான உணவு வகைகள் அவற்றில் நிறைந்தது. உடனே அவை பரிமாறப்பட்டன. போஜனம் முடிந்து தாம்பூலமும் வழங்கப்பட்டவுடன் துர்வாசர், “ராமா, தங்களின் மகிமையை சாதாரண மக்களுக்கு காண்பிக்க விரும்பினேன். அதைக் காண்பித்துவிட்டேன். பரந்தாமா, ரட்சகா, சிருஷ்டிகர்த்தா, சம்ஹார கர்த்தாவான உங்களை பரீட்சித்ததற்கு என்னை மன்னித்து அருளும் ” என்று வேண்டி வலம் வந்து வணங்கினார்.