பதிவு செய்த நாள்
08
ஜூன்
2018
11:06
ராமேஸ்வரம்:ராமேஸ்வரத்தில், பசுமை ராமேஸ்வரம் அமைப்பு சார்பில் புனரமைக்கப்பட்டுள்ள தர்மர் தீர்த்தம், விரைவில் பக்தர்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது.
புண்ணியதலமான ராமேஸ்வரத்தில் கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவின் பசுமை ராமேஸ்வரம் அமைப்பு சார்பில் பல்வேறு சமூக மேம்பாட்டு பணிகள், ஆன்மிக பணிகள் நடந்து வருகின்றன. இதன் ஒரு கட்டமாக ராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சிமடத்தில் பழமையான 28 தீர்த்தங்கள் புனரமைக்கப்பட்டன. இவற்றில் ஏற்கனவே பாழடைந்து கிடந்த நான்கு தீர்த்தங்கள் சீரமைக்கப்பட்டன; 24 தீர்த்தங்கள் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டவை. அதில் ஒரு தீர்த்தமாக, ராமர் பாதத்தில் இருந்து அரை கி.மீ., துாரத்தில் தர்மர் தீர்த்தம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.இது குறித்து பசுமை ராமேஸ்வரம் மைய பொறுப்பாளர் ஸ்ரீதரன் கூறியதாவது:விவேகானந்தா கேந்திரா செயலாளர் வாசுதேவன் தலைமையில், ராமேஸ்வரத்தின் அறியப்படாத ஆன்மிக சிறப்பை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். ஸ்கந்த புராணத்தில், தர்மர் தீர்த்தம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அதனைக்கொண்டு விவேகானந்தா கேந்திராவின் சரஸ்வதி ஆய்வு நடத்தினார். பழையகாலத்தில் இருந்த வரைபடங்கள், முதியோர்கள் கூறிய அடையாளங்கள், வருவாய்த்துறை ஆவணங்களை கொண்டு தேடி சரிப்பார்த்த போது, ராமர் பாதம் அருகே இந்த தீர்த்தம் மணலில் புதைந்து கிடப்பது தெரியவந்தது.
இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான இந்த பகுதியை, அவர்கள் அனுமதியோடு புனரமைக்க முடிவு செய்தோம். கலெக்டர் நடராஜன் ஒத்துழைப்பு அளித்தார். விவேகானந்தா கேந்திரம் ஏற்பாட்டில், எட்டு லட்சம் ரூபாய் செலவில் இப்போது புனரமைப்பு பணிகள் நிறைவு பெற்றுள்ளன.ராமர் பாதம் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள், விரைவில் தர்மர் தீர்த்தத்தையும் தரிசிக்கலாம். தர்மர் தீர்த்தம் மரண தோஷம், எம பயம் தீர்க்கும் என்று புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது.இவ்வாறு கூறினார்.