பதிவு செய்த நாள்
19
ஜன
2012
11:01
கன்னியாகுமரி : சாமிதோப்பு ஐயா வைகுண்டபதியில் நாளை தைத்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்குகிறது. விழாவை முன்னிட்டு நாளை அதிகாலை 3 மணிக்கு பணிவிடை துவங்கிறது. பக்தர்கள் ஊர்வலமாக வழிபாடு நடத்துகின்றனர். காலை 6 மணிக்கு சிறப்பு பணிவிடை, தொடர்ந்து கொடியேற்றம் நடக்கிறது. பாலபிரஜாபதி அடிகளார் கொடியேற்றுகிறார். தொடர்ந்து வாகன பவனி, தர்மம், பகல் 12 மணிக்கு அன்னதானம், மாலை ஆறு மணிக்கு ஐயா தொட்டில் வாகனத்தில் பவனி, இரண்டாம் நாள் ஐயா பூஞ்சப்பர வாகனத்தில் பவனி, மூன்றாம் நாள் வெள்ளை சாற்றி அன்ன வாகனத்தில் பவனி, நான்காம் நாள் மயில் வாகனத்தில் பவனி, ஐந்தாம் நாள் பச்சை சாற்றி பெரிய தீவட்டியுடன் வாகன பவனி நடக்கிறது. ஆறாம் நாள் சப்பர வாகனத்தில் பவனி வந்து வடக்குவாசலில் பக்தர்கள் சுருள் வைத்து சிறப்பு வழிபாடு நடக்கிறது. ஏழாம் நாள் சிவப்பு சாற்றி கருட வாகனத்தில் பவனி நடக்கிறது.
கலிவேட்டை : எட்டாள் நாள் விழாவான வரும் 27ம் தேதி கலிவேட்டை நடக்கிறது. மாலை 4 மணிக்கு ஐயா குதிரை வாகனத்தில் புறப்பட்டு பதி வலம் வந்து முந்திரி கிணறு அருகில் அம்பு எய்து கலி வேட்டையாடுகிறார். பின்னர் பக்தர்களுக்கு பதம் வழங்கப்படுகிறது. பின்னர் அய்யா செட்டிவிளை, சாஸ்தான்கோயில்விளை, சோட்டபணிக்கன்தேரிவிளை, காமராஜபுரம் பகுதிகள் வழியாக பவனியாக சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார், பக்தர்கள் அய்யாவிற்கு சுருள் வைத்து வழிபடுகின்றனர். இரவு அன்னதானம் நடக்கிறது. ஒன்பதாம் நாள் அனுமன் வாகனத்தில் பவனி, 10ம் நாள் இரவு இந்திர விமான வாகனத்தில் பவனி நடக்கிறது. திருவிழா நடக்கும் நாட்களில் காலை மற்றும் மாலையில் பணிவிடை, அன்னதானம், கலைநிகழ்ச்சிகள், ஏடுவாசிப்பு, ஆகியவை நடக்கிறது.
தேரோட்டம்: 11ம் நாள் திருவிழாவான 30ம்தேதி தேரோட்டம் நடக்கிறது. பகல் 12 மணியளவில் அய்யா பல்லக்கு வாகனத்தில் வந்து தேருக்கு எழுந்தருளுகிறார். பின்னர் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுக்கின்றனர். இரவு கலைநிகழ்ச்சிகள் மற்றும் அன்னதானம் நடக்கிறது. திருவிழா ஏற்பாடுகளை பாலபிரஜாபதி அடிகளார், பாலஜனாதிபதி, பாலலோகாதிபதி, ராஜவேல், பையன், கிருஷ்ணராஜ், பையன்நேமி, பையன் கிருஷ்ணநாமமணி, பையன் செல்லவடிவு, ஆகியோர் செய்துள்ளனர்.