பதிவு செய்த நாள்
19
ஜன
2012
11:01
கோபிசெட்டிபாளையம்: கோபி பச்சைமலை பாலமுருகன் கோவிலில் இடிந்து விழுந்துள்ள சுற்றுச் வரை கட்டுவதற்காக 15 லட்சம் ரூபாய் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் அதிக சுற்றுலா தளங்கள் மற்றும் பிரசித்தி பெற்ற கோவில்களை கொண்ட பகுதியாக கோபி வருவாய் கோட்டம் உள்ளது. மேலும் கோபியை சுற்றிலும் ஏராளமான கல்வி நிறுவனங்கள், மில்கள் மற்றும் பனியன் கம்பெனிகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெளி மாவட்டத்தில் இருந்து மைசூருக்கு சுற்றுலா செய்யும் பயணிகள் பெரும்பாலும் கோபி பகுதியை தாண்டிதான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. கோபி சுற்று வட்டாரத்தில் பவானி சாகர் அணை, கொடிவேரி அணை, பண்ணாரி அம்மன் கோவில், கொண்டத்து காளியம்மன் கோவில், பச்சைமலை மற்றும் பவளமலை முருகன் கோவில்கள் உள்பட பல புகழ்மிக்க திருத்தலங்களும் உள்ளன. இதனால் கோபியை தாண்டி செல்லும் சுற்றுலா பயணிகள் இத்தகைய கோவில்களுக்கு சென்று ஸ்வாமி தரிசனம் செய்வது வழக்கம். கோபி பஸ் ஸ்டாண்டில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் மலைப்பகுதியில் உள்ள பச்சைமலை பாலமுருகன் கோவில் மிகவும் விஷேசமானது. பௌர்ணமி, கிருத்திகை, தைப்பூசம் உள்ளிட்ட முருக கடவுளுக்கு விஷேசமான நாட்களில் மட்டும், கோபி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருகின்றனர். தினமும் தங்கத்தேர் உற்சவத்துக்கும் நிறைய பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். பச்சைமலை பாலமுருகன் கோவிலில் பக்தர்கள் வசதிக்காக மலைக்கு செல்லும் பாதையில் சுற்றுச்சுவர் மழையால் இடிந்து விட்டது. சுற்றுச்சுவரை கட்டுவதற்காக, 15 லட்சம் ரூபாய் திட்ட மதிப்பீடு செய்து, அறநிலையத் துறைக்கு கோவில் நிர்வாகம் அனுப்பி வைத்துள்ளது.