பதிவு செய்த நாள்
19
ஜன
2012
11:01
அரியலூர்: அரியலூர் விளாங்கார தெரு ஸ்ரீ காளியம்மனுக்கு வரும் 20, 21 தேதிகளில் மகா நவசண்டி ஹோமம் நடக்கிறது. அரியலூர் விளாங்காரத் தெருவில் எழுந்தருளும் ஸ்ரீ காளியம்மன் கோவிலில், தை அமாவாசையை முன்னிட்டு, வரும் 21, 22 தேதிகளில் மகா நவசண்டி ஹோமம் நடத்தப்படுகிறது. அரியலூர் அண்ணாநகர் செல்வமுத்து குமர சிவாச்சாரியார் தலைமையில் சிவாச்சாரியார்கள் பங்கேற்று நடத்தவுள்ள, விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கும் நவசண்டி ஹோமத்தை முன்னிட்டு, கோபூஜை, மாத்ருதுகா பூஜை, தேவியின் நவஆவரண பூஜை, பிரம்மச்சாரி பூஜை, வடுகபூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜை மற்றும் யாகங்கள் நடத்தப்படுகிறது. அவரவர் ஜாதகப்படி ஏற்படும் ஏழரை சனி, அஷ்டம சனி, செவ்வாய் தோஷம், ராகு, கேது கிரங்கங்களால் ஏற்படும் தார தோஷம், காலசர்ப்ப தோஷம், நாகதோஷம், குழந்தைகளுக்கு ஏற்படும் பாலாரிஷ்டம் போன்ற தோஷங்கள் நிவர்த்தி அடையவும், எதிரிகளால் ஏற்படுத்தப்படும் மந்திரீகம், ஏவல், பில்லி, சூனியம் போன்ற பெரும் பகைகள் விலகிடவும், தீய ஆவிகளின் சேஷ்டைகள் நீங்கிடவும், வம்பு வழக்குகளிலிருந்து விடுதலை பெற்றிடவும், திருமண தடை நீங்கிடவும், வாணிப வளம் பெருகிடவும், நாடும் நகரமும் துர்பிக்ஷம் நீங்கி சுபிக்ஷம் பெற்றிடவும் வேண்டி நவசண்டி ஹோமம் நடத்தப்படுகிறது. மேற்கண்ட இரண்டு நாட்களும், அரியலூர் விளாங்கார தெரு பக்தர்கள் சார்பில் நடத்தப்படும் இந்த நவசண்டி ஹோமத்தில், பொதுமக்கள் பங்கேற்க கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.