மதுரை : மதுரை மீனாட்சி அம்மனுக்கு 1.50 கோடி ரூபாயில், ஒன்றரை கிலோ எடையுள்ள வைர கிரீடம் நேற்று உபயமாக வழங்கப்பட்டது. அம்மனின் மூலவர் சிலைக்கு, 4.50 கிலோ எடையுள்ள வைர கிரீடம் முக்கிய நாட்களுக்கு சாத்தப்படுகிறது. இது, 30 ஆண்டுகளுக்கு முற்பட்டது. பல கோடி ரூபாய் மதிப்புள்ள இக்கிரீடத்தை பாதுகாக்க, கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. இதன் காரணமாக, புதிய கிரீடம் வழங்க மதுரை தொழிலதிபர் ஏ.என்.சுப்பையா செட்டியார், சரோஜா குடும்பத்தினர் முன்வந்தனர். 300 காரட் எடையுள்ள வைரக் கற்கள், 154 காரட் எடையுள்ள பச்சை, சிவப்பு கற்கள் உட்பட ஒன்றரை கிலோ தங்க வைர கிரீடத்தை நேற்று கோவில் நிர்வாக அதிகாரி ஜெயராமனிடம் வழங்கினர். சுவாமி சன்னிதி அருகே இக்கிரீடத்திற்கு யாக சாலை பூஜை நடந்தது. பின், கோவில் பிரகாரங்களில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, அம்மனுக்கு சாத்தப்பட்டது.