பதிவு செய்த நாள்
20
ஜன
2012
11:01
சேலம் : ஏற்காட்டில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன், பெண்கள் மட்டும் பங்கேற்ற விசேஷ அம்மன் பூஜை விழா, நேற்று நடந்தது. ஏற்காடு அடுத்த வெள்ளக்கடை கிராமத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட மலைவாழ் குடும்பத்தை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இங்கு, ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்தாண்டு பொங்கல் பண்டிகையையொட்டி, நேற்று, வெள்ளக்கடை கிராமத்தில் பெண்கள் மட்டும் பங்கேற்கும் விசேஷ அம்மன் பூஜை நடந்தது. இந்த பூஜையில், பெண் குழந்தைகள் முதல் மூதாட்டிகள் வரை மட்டுமே பங்கேற்றனர். ஐந்து வயதுக்கு மேற்பட்ட ஆண் குழந்தைகளையும், ஊரில் இருந்து வெளியேற்றினர். ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் அம்மன் பூஜையை, மூதாட்டி ஒருவர் முன்னின்று நடத்தி வந்தார். அவர் இறந்ததால், வேறு ஒரு மூதாட்டி தலைமையில், அம்மன் பூஜை நடந்தது. அம்மனுக்கு பிடித்த கேழ்வரகு, பழம், பூ, தேங்காய் வைத்து ஊர் நடுவில் உள்ள மாரியம்மன் கோவிலில் படையலிட்டு வழிபாடு நடத்தினர். ஆண்கள் ஊருக்குள் நுழையாமல் இருக்க, எல்லைப் பகுதிகளில் விபூதிகள் கொட்டினர். பெண்கள் மட்டும் பங்கேற்ற அம்மன் பூஜை முடிவடைந்த பின், மஞ்சள் தண்ணீர் தெளித்து, விழாவை முடித்துக் கொண்டனர். வெளியூரில் இருந்து ஆண்கள் ஊருக்குள் நுழையாமல் இருக்க, வெள்ளக்கடையை சேர்ந்த ஆண்கள், எல்லையில் காவலுக்கு இருந்தனர்.
பத்திரிகையாளர் மீது பாய்ச்சல் : வெள்ளக்கடை கிராமத்தில் பெண்கள் மட்டும் பங்கேற்கும் பூஜையில் பல ஆண்டுகளாக சர்ச்சை கிளப்பப்படுவதால், போலீஸ், வருவாய் பெண் அதிகாரிகள் தலைமையில் பூஜை நடந்து வருகிறது. இதற்கு, பத்திரிகைகள் தான் காரணம் என குற்றம்சாட்டி, செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்களை, ஊர்க்காரர்கள் வசைபாடினர். பத்திரிகையாளர்கள், அம்மன் பூஜை நடந்து முடிந்த நிலையில், உள்ளே சென்று புகைப்படமோ, வீடியோ எடுக்கக் கூடாது என கிராமத்தினர் கூச்சலிட்டனர். அங்கிருந்த போலீசார், கிராமத்தினரை சமாதானம் செய்தும், விடாப்பிடியாக கிராமத்தை சேர்ந்த ஆண்கள், தொடர்ந்து பத்திரிகையாளர்களை திட்டிய வண்ணம் இருந்தனர். இதையடுத்து, பத்திரிகையாளர்கள் வெள்ளக்கடை கிராமத்தில் இருந்து வெளியேறிச் சென்றனர்.