பதிவு செய்த நாள்
26
ஜூன்
2018
12:06
காருவள்ளி: மரகதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், கோலாகலமாக கொண்டாடப்பட்டது. காடையாம்பட்டி ஒன்றியத்துக்குட்பட்ட மரக்கோட்டையில், புனரமைக்கப்பட்ட, பார்வதி அம்பிகா சமேத மரகதீஸ்வரர், மாரியம்மன், சுப்பராய விநாயகர் ஆகிய கோவில்களின் கும்பாபிஷேகம், நேற்று நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். கடந்த, 23ல், தீர்த்தம், முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. 24ல், கணபதி பூஜையுடன் துவங்கிய விழா நேற்று யாகசாலை பூஜை முடிந்து, 9:40 மணிக்கு, மூலஸ்தான கோபுர கலசத்துக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. கோவை, பெங்களூரு, சேலம், ஓமலூர், காடையாம்பட்டி, மேச்சேரி உள்ளிட்ட, பல ஊர்களை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். ஓமலூர் தீயணைப்புதுறை மூலம், திரளான பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. தீவட்டிப்பட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
* ஆத்தூர், கோட்டை காயநிர்மலேஸ்வரர் கோவிலில், சோமவார பிரதோஷத்தை முன்னிட்டு, பெரியநாயகி சமேத காயநிர்மலேஸ்வரர், சர்வ அலங்காரத்துடன் உட்பிரகார வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது பக்தர்கள் தேவார, திருவாசக பாடல்களை பக்தி பரவசத்துடன் பாடினர். முன்னதாக நந்தியம்பெருமானுக்கு பால், இளநீர், பன்னீர், சந்தனம், வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. சோமவார பிரதோஷத்தை ஒட்டி, ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அதேபோல், ஆத்தூர் கைலாசநாதர், வெள்ளை விநாயகர் கோவிலிலுள்ள மகாலிங்கேஸ்வரர், தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர், வீரகனூர் கங்காசவுந்தரேஸ்வரர், தம்மம்பட்டி, கெங்கவல்லி உள்ளிட்ட பகுதிகளிலுள்ள சிவன் கோவில்களில் சோமவார பிரதோஷ சிறப்பு பூஜைகள் நடந்தன.