பதிவு செய்த நாள்
26
ஜூன்
2018
12:06
சேலம்: சேலம், சுவனேஸ்வரர் கோவில் புதிய மரத்தேர் வெயில், மழையில் சேதமடைந்து வருவதால், அதை பாதுகாக்க கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். சேலம், சுகவனேஸ்வரர் கோவிலுக்கு, 48 லட்சம் ரூபாய், கோட்டை அழகிரிநாத பெருமாள் கோவிலுக்கு, 45 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிய தேர்கள் தயார் செய்யப்பட்டு, கடந்த மாதம் வைகாசி தேரோட்டம் நடத்தப்பட்டது. இந்த தேர்கள் கடந்த, ஜனவரி மாதம் வெள்ளோட்டம் விடப்பட்டது முதல், சேலம் கடை வீதியில் திறந்த வெளியில் நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த மாதம் தேரோட்டத்துக்கு பின், தேர்களுக்கு கொட்டகை போடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இதில், கோட்டை பெருமாள் கோவில் தேருக்கு மட்டும் கொட்டகை போடப்பட்டது. சுகவனேஸ்வரர் கோவில் தேர், கொட்டகை இல்லாமல், திறந்த வெளியில் நிறுத்தப்பட்டுள்ளதால், மழையில் நனைவதோடு, வெயிலில் காய்ந்து, தூசு படிந்துள்ளன. அது மட்டுமின்றி, சில நேரங்களில் குடிமகன்கள் தேரில், வாந்தி எடுத்து வைப்பதோடு, பான்பராக், புகையிலை பயன்படுத்துவோர் எச்சில் துப்புவதும் அரங்கேறி வருகிறது. புதிய தேருக்கு உடனடியாக கொட்டகை அமைக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.