கோவில் வடிவில் நவராத்திரி கொலு: அசத்தி வரும் மூத்த குடிமக்கள்
பதிவு செய்த நாள்
27
செப் 2025 12:09
தொண்டாமுத்தூர்; நவராத்திரி விழா என்றதும் முதலில் நினைவுக்கு வருவது கொலு தான். பூமியில் உள்ள அனைத்து ஜீவராசிகள், தேவர்கள், தெய்வங்களை வைத்து, தினசரி பூஜைகள் செய்து வழிபாடு செய்து நவராத்திரி கொலுவின் சிறப்பு. நவராத்திரியையொட்டி, வீடுகள், பள்ளி, கல்லூரிகளில் கொலு வைத்துள்ளனர். இந்நிலையில், பச்சாபாளையத்தில் உள்ள கோவை கேர் எஸ்3 என்ற மூத்த குடிமக்களுக்கான குடியிருப்பில், இந்தாண்டு நவராத்திரி விழாவையொட்டி, கோவில் வடிவில் கொலு அமைத்துள்ளனர். கோவில் கோபுரம், தெப்பக்குளம், பூக்கடைகள் அமைத்துள்ளனர். அதோடு, 18 சக்தி பீடங்களையும் கோலுவில் அமர்த்தியுள்ளது, மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. இதுகுறித்து, கொலு அமைத்த கீதா கூறுகையில்,"கோவை கேர் குடியிருப்பில், 160 பேர் உள்ளோம். இங்கு, நாங்கள் ஆண்டுதோறும், நவராத்திரி கொலு அமைத்து வருகிறோம். சதியின் மறைவுக்குப் பின், சிவன் அவளின் உடலை தூக்கிச் சென்று ருத்ரதாண்டவம் ஆடினார். உலகம் அழிவதை தடுக்க, விஷ்ணு பகவான் சுதர்சன சக்கரத்தால் சதியின் உடலைப் பிரித்தார். அவை விழுந்த இடங்கள் சக்தி பீடங்களானது. தேவி புராணங்களில், 108 சக்தி பீடங்கள் குறிப்பிட்டாலும், 51 பீடங்கள் மிக முக்கியமானவை. ஒவ்வொரு பீடமும் தாயாரின் தனித்துவ வடிவத்தையும், அவளது வலிமை, கருணை, பாதுகாப்பையும் வெளிப்படுத்துகிறது. இவைகள் கோவில் மட்டுமல்ல, நம்பிக்கை மற்றும் தெய்வீக ஆற்றலின் மையங்களாகவும் விளங்குகின்றன. எனவே, இந்தாண்டு, 18 சக்தி பீடங்களை மூலக்கருத்தாக கொண்டு, கொலு அமைக்க திட்டமிட்டோம். இதற்காக, கடந்த, 4 மாதங்களாக, ஒவ்வொரு பொருட்களாக வாங்கி, 6 பேர் கொண்ட குழு இதை உருவாக்கினோம். மீதமுள்ளவர்களும், தங்களால் முடிந்த உதவிகளை செய்தனர். பணியாளர்களும், எங்களுக்கு மிகவும் உதவி புரிந்தனர். கொலுப்படிகளை, கோவில் கோபுரம் வடிவில் அமைத்து, கோவிலில், பட்டீஸ்வரர், பச்சைநாயகி அம்மனை அமைத்துள்ளோம். 18 சக்தி பீடங்களும், அலங்கரிக்கப்பட்டு அற்புதமாய் அமைந்துள்ளது. இங்குள்ள மூத்த குடிமக்கள் இணைந்து, தினசரி, கொலுவில், 2 மணி நேரம் பாராயணமும், மாலையில், சிறப்பு பூஜையும், அதனைத்தொடர்ந்து, கலைநிகழ்ச்சிகளும் நடத்தி வருகிறோம்,"என்றார்.
|