குற்றாலம் :குற்றாலத்தில் நேற்று தை அமாவாசையை முன்னிட்டு தர்ப்பணம் செய்ய பொதுமக்கள் கூட்டம் அலைமோதி காணப்பட்டது. ஆடி மாத அமாவாசை அன்று நம்மை காண வரும் பித்ருக்களாகிய மறைந்த நம் முன்னோர்கள் தை அமாவாசையில் விடைபெற்று திரும்புவதாக ஐதீகம். பிற அமாவாசைகளில் மறைந்த நம் முன்னோர்களுக்கு குறிப்பாக பெற்றோருக்கு தர்ப்பணம் செய்யாமல் விட்டவர்கள் தை அமாவாசையில் தர்ப்பணம் செய்து முன்னோர்களை வழிபட்டால் வளங்கள் கூடும் என்பதால் தை அமாவாசையை மிகவும் முக்கியமான நாளாக கருதி பித்ரு வழிபாடு செய்கின்றனர். நேற்று தை அமாவாசயை முன்னிட்டு குற்றாலம் குற்றாலநாதர் கோயிலில் அதிகாலையிலிருந்தே பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மெயினருவியில் புனித நீராடி அருவிக்கரையில் அமர்ந்திருந்த புரோகிதர்களிடம் சென்று மந்திரங்கள் ஓதி எள்ளும், தண்ணீரும் இறைத்து மோதிரவிரலில் தர்ப்பை புல் அணிந்து காசி...காசி... என்று கூறி படித்துறையில் தன் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர். குற்றாலம் அருவிக்கரையில் தர்ப்பணம் செய்து கோயிலில் தரிசனம் பெற பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.