பதிவு செய்த நாள்
23
ஜன
2012
11:01
பாவூர்சத்திரம் :அருணாப்பேரி அழகுமுத்து மாரியம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா நடந்தது. அருணாப்பேரி அழகுமுத்து மாரியம்மன் கோயிலில் 49ம் ஆண்டு திருவிழா 10 நாட்கள் நடந்தது. திருவிழா காலங்களில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், முக்கால பூஜை, தீபாராதனை, வில்லிசை, மேளம் நடந்தது. 6ம் திருநாள் முதல் 9ம் திருநாள் வரை இரவு அம்மன் சப்பரத்தில் அமர்ந்து மகிழ்வண்ணநாதபுரம், நவநீதகிருஷ்ணபுரம், இலங்காபுரிபட்டணம், நாகல்குளம், பெத்தநாடார்பட்டி, பொட்டலூர் ஆகிய கிராமங்களில் முக்கிய வீதி வழியாக சென்று திரும்பியது. நிறைவு நாளில் சப்பரம் வீதியுலா நடந்தது. அன்று இரவு 10 மணிக்கு வில்லிசை, மேளம், பேண்ட் வாத்தியம், மகுடம், கனில் ஆட்டம், செண்டாமேளம், இன்னிசை கச்சேரி, சிறப்பு பூஜை வழிபாடு நடந்தது. அதிகாலை 3 மணிக்கு பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் திரளாக விரதம் மேற்கொண்டு அக்னி குண்டத்தில் இறங்கினர். வாணவேடிக்கை நடந்தது. திருவிழா ஏற்பாடுகளை கோயில் தர்மகர்த்தா சிவன்பாண்டி செய்திருந்தார்.