பதிவு செய்த நாள்
04
ஜூலை
2018
11:07
தமிழகம் முழுவதும் உள்ள, 38 ஆயிரத்து, 200 கோவில்களில், பிளாஸ்டிக் தடை உத்தரவை உடனடியாக பின்பற்ற வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழக அரசு, 2019 ஜனவரி முதல், பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக, முதல்வர் அறிவித்துள்ளார். இந்நிலையில், கோவில்களில் இப்போதிருந்தே பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:தமிழகம் முழுவதும், கோவில்களில் பிளாஸ்டிக் பயன்படுத்தக்கூடாது என, ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது. கோவில் வளாகத்தில் உள்ள கடைகளில், பிளாஸ்டிக் பைகளை வைத்து பொருட்களை கொடுக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டிருந்தது. சிலர் மட்டுமே கடைபிடிக்கின்றனர். தமிழக அரசு வரும், 2019 ஜனவரி முதல் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை விதித்துள்ளது. அப்போது கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் கூறினால், அதை கடைபிடிப்பதில் சிக்கல் ஏற்படும். இதை கருத்தில் கொண்டு இப்போதிருந்தே, பிளாஸ்டிக் பயன்படுத்தக்கூடாது என்ற நடைமுறையை ஏற்படுத்திவிட்டால், 2019ல் எளிதாக இருக்கும்.எனவே, தமிழகம் முழுவதுமுள்ள கோவில்களில், பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கோவிலுக்கு வருவோரை வெளியிலேயே சோதித்து, பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.மதுரை, மீனாட்சியம்மன் கோவிலில் ஏற்பட்ட தீ விபத்தை தொடர்ந்து, மற்ற கோவில்களில் அதுபோன்ற விபத்து ஏற்பட்டு விடாமல் தடுக்கும் வகையில், பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, கோவில்களில் அகல்விளக்கு பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.மாறாக, கோவிலில், அணையா விளக்கு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதில், பக்தர்கள் எண்ணெயை மட்டும் எடுத்து வந்து, ஊற்றிவிட்டு சென்று விட வேண்டும். எப்போதும் அந்த விளக்கில் ஒளி இருக்கும்.எனவே கோவில்களுக்கு வெளியே அகல் விளக்கு விற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதில், அணையா விளக்கு வைக்க வலியுறுத்தப்படுகிறது. இந்த அணையா விளக்கை பெரும்பாலான கோவில்களில் நன்கொடையாளர்கள் வாங்கி தர ஆர்வம் காட்டுகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -