பதிவு செய்த நாள்
05
ஜூலை
2018
11:07
மாமல்லபுரம்: வறண்ட நிலையில், துர்நாற்றம் அடிக்கும் வகையில் உள்ள ஸ்தலசயன பெருமாள் கோவில் குளத்தைச் சீரமைக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவில், 108 வைணவக் கோவில்களில், 63ம் கோவில். இதன் தீர்த்த குளம், கடற்கரை சாலையில் அமைந்து உள்ளது. இரண்டு ஏக்கர் பரப்பில் அமைந்து, மைய பகுதியில், 25 ச.அ., பரப்பு நீராழி மண்டபம் உள்ளது. இயற்கை மணற்பரப்புடன், எந்நேரமும் நீர் சுரக்கும். பாறைக்குன்று பகுதி மழைநீரும், குளத்தை அடையும். நீண்ட காலத் திற்கு முன், குளம் வற்றாமல், நீர் நிறைந்திருக்கும். நாளடைவில், சுற்றுப்புறத்தில் கட்டடங்கள் பெருகி, நீர்வரத்து பாதைகள் அடைப்பட்டு, மழைநீர் வரத்து முற்றிலும் தடைபட்டது. குளம் துார்ந்து, நீரூற்றும் அழிந்து, சேற்றுச் சகதியுடன் சீரழிகிறது.தற்போது தண்ணீர் இல்லாததால், குளம் வறண்டு, சேற்றுச் சகதியில் கொடிகள் மக்கியும், மீன்கள் இறந்தும், துர்நாற்றம் வீசுகிறது.குளத்தை துார்வாரி, முறையாக பராமரிக்க வேண்டும் என, சுற்றுலாப் பயணியரும், பக்தர்களும் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.