சண்முகநாதன் கோயிலில் திருப்பணிக்கு வனத்துறை அனுமதிக்க வலியுறுத்தல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஜூலை 2018 12:07
கம்பம், ராயப்பன்பட்டி வனப்பகுதியில் அமைந்துள்ள சண்முகநாதன் கோயிலில் திருப்பணி செய்து கும்பாபிேஷகம் நடத்த வனத்துறை அனுமதிக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்துகின்றனர். ராயப்பன்பட்டி சண்முகாநதி அணைக்கு அருகில் வனப்பகுதியில் அமைந் துள்ளது சண்முகநாதன் கோயில். பாண்டிய மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டது. பிரசித்திபெற்ற இக்கோயிலில் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பக்தர்கள் பல கி.மீ., துார வனப்பகுதிக்குள் நடந்து வந்து தரிசனம் செய்கின்றனர். பங்குனி உத்திரம் மற்றும் தைப்பூச நாட்களில் ஆயிரக்கணக்கில் கூடுகின்றனர். பழமை வாய்ந்த இந்த கோயிலின் அருகில் மலைக்குன்றிலிருந்து தீர்த்தம் ஆண்டுமுழுவதும் விழுந்து கொண்டே இருக்கும். குகையில் விபூதி கிடைக்கிறது. இக்கோயிலில் திருப்பணி செய்து கும்பாபிேஷகம் நடத்த இப்பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி ரகுபதி தலைமையில் கிராமங்களை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. அதற்கான பொருட்களை வனப்பகுதிக்குள் கொண்டுசெல்ல வனத்துறை அனுமதி மறுத்து வருகிறது. பலமுறை பக்தர்களுக்கும், வனத்துறையினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு திருப்பணி முடங்கியுள்ளது. பக்தர்கள் கூறுகையில், திருப்பணி செய்ய பொருள்களை கொண்டு செல்ல வனத்துறை அனுமதிக்க வேண்டும். கலெக்டர் இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.