பதிவு செய்த நாள்
12
ஜூலை
2018
12:07
இடைப்பாடி: அங்காளம்மன் கோவிலுக்கு தங்கத்தேர் செய்ய, காணிக்கையாக கிடைத்த தங்கத்தை அளவீடு செய்து, அதை, தகடுகளாக மாற்றும் பணி நடந்தது. சேலம் மாவட்டம், இடைப்பாடி அருகே, கல்வடங்கம், அங்காளம்மன் கோவில், இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ளது. அதன் தேரோட்டம், மாசி மாதம் நடைபெறும். அதற்காக, கல்வடங்கம் அங்காளம்மன் வழிபாட்டு அறக்கட்டளை மூலம், தங்கத்தேர் செய்யும் பணியை, தலைவர் மோகனசுந்தரம் தலைமையில் குழுவினர், 2015 ஆக., 16ல் தொடங்கினர். ஆனால், நன்கொடை வசூல் முறைகேடு புகார், காணிக்கை பொருட்களை பாதுகாக்க அறை ஒதுக்காதது ஆகியவற்றால், ஓராண்டாக நிறுத்தப்பட்டிருந்த பணி, மூன்று மாதங்களுக்கு முன் தொடங்கி, தற்போது, இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தேருக்கு தங்கத்தகடு பதிக்க, காணிக்கையாக கிடைத்த தங்க ஆபரணங்களை அளவீடு செய்யும் பணி நேற்று தொடங்கியது. சங்கிலி, தோடு, மூக்குத்தி உள்ளிட்ட ஆபரணங்கள், 5 கிலோ, 345 கிராம் இருந்தது. இதையடுத்து, தேருக்கு தகடுகளாக மாற்றும் பணி நடந்தது. இதுகுறித்து, அறக்கட்டளை செயலாளர் முத்துசாமி கூறுகையில், அறக்கட்டளை மூலம், தங்கம், பணம் என, நிதியுதவி பெற்று, தங்கத்தேர் செய்து, அதை கோவில் நிர்வாகத்துக்கு ஒப்படைக்கவுள்ளோம். இப்பணி, ஒரு மாதத்தில் முடித்து, ஆக., 30ல், முதல்வர் பழனிசாமி, தேரோட்டத்தை தொடங்கிவைக்கவுள்ளார், என்றார்.