கோயில்களில் விளக்கு ஏற்ற தடை 25 லட்சம் விளக்குகள் தேக்கம் தொழிலாளர்கள் வேலையிழப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஜூலை 2018 10:07
மானாமதுரை: தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கோயில்களில் விளக்கு ஏற்றுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் மானாமதுரையில் தயாரிக்கப்பட்ட 25 லட்சத்திற்கும் அதிக மான அகல் விளக்குகள் தேக்கமடைந்துள்ளதால் 150 க்கும் மேற்பட்ட மண்பாண்ட தொழிலாளர்கள் வேலையிழந்து தவித்து வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மண்பாண்ட பொருட்களுக்கு பெயர் பெற்ற ஊராகும். இங்கு வருடந்தோறும் மண்ணால் ஆன பல்வேறு வகையான பொருட்களை தயாரித்து வருகின்றனர்.
உடைகுளம் பகுதியில் ஆண்டு முழுவதும் கோயில்களில் விளக்கு ஏற்ற பயன்படும் அகல்விளக்குகளை தயாரிக்கும் பணியில் 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் ஏற்பட்ட தீ விபத்தை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் பக்தர்கள் விளக்கு ஏற்ற தடை விதிக்கப்பட்டது. மேலும் பல்வேறு கோயில்களிலும் மோட்ச தீபம் ஏற்றுவதற்கும் தடை செய்யப்பட்டதால் மானாமதுரையில் தயாரிக்கப்பட்ட 25 லட்சத்திற்கும் அதிகமான அகல் விளக்குகள் விற்பனையாகாமல் தேக்கமடைந்துள்ளன.
இது குறித்து மண்பாண்ட தொழிலாளி மாலதி 45, கூறுகையில், நாங்கள் வருடந்தோறும் அகல் விளக்குகள் மட்டுமே தயார் செய்து வந்தோம். தமிழகம் உள்பட வெளிமாநிலங்களிலிருந்தும் ஏராளமான மொத்த வியாபாரிகள் ஆர்டர்கள் கொடுத்ததின் பேரில் சுமார் 25 லட்சத்திற்கும் அதிகமான அகல்விளக்குகளை தயார் செய்து வைத்திருந்தோம்.
ஆனால் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளதால் அந்த அகல் விளக்குகள் அப்படியே தேங்கி கிடக்கின்றன. மேலும் தற்போது 300 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்த வருமானம் இன்றி தவித்து வருகின்றனர், என்றார்.