பதிவு செய்த நாள்
16
ஜூலை
2018
12:07
உடுமலை: திருமூர்த்திமலையில், ஆண்டுதோறும் நடத்தப்படும் ஆடிப்பெருவிழா குறித்து, எவ்வித அறிவிப்பும் இல்லாததால், உடுமலை பகுதி மக்கள் ஏமாற்றத்தில் உள்ளனர். உடுமலை அருகே திருமூர்த்திமலையில், பிரசித்தி பெற்ற அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. ஆடிப்பெருக்கு நாளையொட்டி, சுற்றுப்பகுதியை சேர்ந்த விவசாயிகள், ஆடிப்பட்டம் சிறக்க, காளை வண்டிகளில், கோவிலுக்கு வந்து, அப்பட்டத்துக்கான விதைகளை வைத்து, வழிபாடு நடத்துவது வழக்கம். இந்த நாளை சிறப்பிக்கவும், சுற்றுலாவை மேம்படுத்தவும், கடந்த, 2013ல், ’ஆடிப்பெருந்திருவிழா’ என்ற பெயரில், திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில், விழா நடத்தப்பட்டது. இந்த விழாவுக்கு, வரவேற்பு கிடைத்ததால், ஆண்டுதோறும் நடத்த திருப்பூர் மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டது.
பல்வேறு காரணங்களால், இந்த விழா ஒவ்வொரு ஆண்டும் களையிழந்து, கடந்த இரண்டு ஆண்டுகளாக பெயரளவுக்கு நடத்தப்படும் நிகழ்வாக மாறிவிட்டது.இந்த விழாவின் போது, சுற்றுலா மேம்பாட்டுக்காக, சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற, அப்போதைய அமைச்சர்கள் அறிவித்த திட்டங்கள் எதுவும் செயல்பாட்டுக்கு வரவில்லை. வருவாய்த்துறையின் நலத்திட்டங்களை வழங்கவும், அரசுத்துறைகளின் சம்பிரதாய கண்காட்சி அரங்கு அமைக்க நிகழ்ச்சியாக ஆடிப்பெருவிழா மாறியது.இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவும், இந்தாண்டு விழாவை சிறப்பாக நடத்தி, சுற்றுலாப்பயணிகளை திருமூர்த்திமலைக்கு வரவழைக்கவும், முன்னதாகவே திட்டமிட்டு, பணிகளை துவக்க வேண்டும். இந்தாண்டு, ஆடிப்பெருவிழாவை சிறப்பாக நடத்த, சுற்றுலாத்துறை மற்றும் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. வருவாய்த்துறையினர் கூறுகையில், ஆக., 3ல், வரும் ஆடிப்பெருக்கையொட்டி, திருமூர்த்திமலையில், விழா நடத்த முதற்கட்ட ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகிறது. சுற்றுலாத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் வழிகாட்டுதல்கள் வழங்கியதும், விழாவுக்கான முதற்கட்ட பணிகள் துவங்கும்,’ என்றனர்.
அச்சச்சோ அமராவதி: உடுமலை அருகே மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில், அமைந்துள்ள அமராவதி அணை சுற்றுலாத்தலமாக உள்ளது. அணை பூங்கா, முதலைப்பண்ணை என பல்வேறு சுற்றுலா அம்சங்கள் இருந்தாலும், சுற்றுலாப்பயணிகள் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. இதை மாற்ற, கடந்த சில ஆண்டுகளுக்கு முன், முதலைப்பண்ணையில், முதலைப்பொங்கல் என்ற பெயரில், விழா நடத்தப்பட்டு, சுற்றுலாப்பயணிகள் பங்கேற்றனர். அதன்பின்னர், சுற்றுலா வளர்ச்சிக்கான எவ்வித மேம்பாட்டு பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. திருமூர்த்திமலையில், விழா நடக்கும் போது, அமராவதியிலும் சில நிகழ்ச்சிகளை நடத்தினால், வெறிச்சோடி கிடக்கும் அப்பகுதியும் களைகட்ட வாய்ப்புள்ளது.