பதிவு செய்த நாள்
16
ஜூலை
2018
12:07
சென்னை:பெசன்ட் நகரில் உள்ள ரத்னகிரீஸ்வரர் கோவிலில், பிளாஸ்டிக்கிற்கு முழு தடை விதித்து, திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், கோவில் வளாகம் முழுவதும், துாய்மையாக மாற்றப்பட்டு உள்ளது. பெசன்ட் நகரில் அமைந்துள்ளது, அரளாகேசி ரத்னகிரீஸ்வரர் கோவில். பிரசித்தி பெற்ற இந்த கோவிலில், சிவராத்திரி அன்னாபிஷேகம், நவராத்திரி, ஆடிப்பூரம் உள்ளிட்ட திருவிழாக்கள், மிக சிறப்பாக நடக்கும்.இந்த கோவில், துாய்மைக்கான சிறந்த விருதை, மூன்று முறை பெற்றுள்ளது. இந்நிலையில், பிளாஸ்டிக்கிற்கு முழு தடை விதித்ததோடு, கோவிலில் சேகரமாகும் குப்பை கழிவுளை, உரமாக மாற்றும் திட்டத்தையும் செயல்படுத்தி, துாய்மை இடமாக, கோவில் வளாகம் மாற்றப்பட்டு உள்ளது.
பிளாஸ்டிக்குக்கு தடை: கோவில் நிர்வாகத்தினர் கூறியதாவது:ரத்னகிரீஸ்வரர் கோவிலில், ஓராண்டாகவே பிளாஸ்டிக் பொருட்கள் தவிர்க்கப்பட்டு உள்ளன. சமீபத்தில், பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிப்பதாக, தமிழக அரசு அறிவித்தது. அதைத்தொடர்ந்து, கோவிலுக்குள் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.மாற்றாக, காகித பை, பாக்கு மட்டை தட்டு, இலைகளால் செய்யப்பட்ட தொன்னை ஆகியவற்றை பயன்படுத்தி வருகிறோம். மேலும், ’நம்ம ஊரு பவுண்டேஷன்’ சார்பில், குப்பை கழிவுகளற்ற பசுமை, துாய்மை இடமாக, கோவில் மாற்றப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.இது குறித்து, ’நம்ம ஊரு பவுண்டேஷன்’ நிறுவனர் நடராஜன் கூறியதாவது:எங்கள் அமைப்பு துவங்கிய மூன்று ஆண்டுகளில், 1,000 வீடுகள், பசுமை வீடுகளாக மாற்றப்பட்டு உள்ளன.
விழிப்புணர்வு: மேலும், ஐந்து பள்ளிகள், துாய்மை பள்ளியாக மாற்றப்பட்டு உள்ளன. முதன்முறையாக, ரத்னகிரீஸ்வரர் கோவில், பசுமை மற்றும் துாய்மை இடமாக மாற்றப்பட்டு உள்ளது.கோவிலில், திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், கோவிலில் சேகரமாகும் கழிவு, உரமாக மாற்றப்படுகிறது. கோவில் முழுவதும், விழிப்புணர்வு விளம்பர பலகைகள் பொருத்தப்பட்டு உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.