பதிவு செய்த நாள்
17
ஜூலை
2018
03:07
பணத்துக்காக எது வேண்டுமானாலும் செய்ய மக்களில் ஒரு பகுதியினர் தயாராகி விட்டனர். கொலை, கொள்ளை, ஏமாற்றுதல் ஆகியவற்றின் பெயரால் அவர்கள் தங்களை உயர்த்திக் கொள்ள நினைக்கின்றனர். பணம் இருந்தால் எல்லாம் நடந்து விடும் என்று நினைக்கிறார்கள். பணக்காரர்களின் வாழ்க்கையைப் பார்த்து, அதில் மயங்கி, தாங்களும் பணத்துடன் வாழ துடிக்கிறார்கள். படித்தவர்கள் கூட சம்பாதிக்கும் பணத்தில், மார்க்க விதிகளுக்கு மாறாக, குடி, விபச்சாரம் போன்ற தடுக்கப்பட்ட வழிகளில் செல்கிறார்கள். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் அதிக கவனம் செலுத்துகிறார்கள். கம்ப்யூட்டரை சீரழிவு சாதனமாக மாற்றிக் கொள்கிறார்கள். இறுதியில் பல நோய்களுக்கு ஆளான பிறகு, ‘இறைவா! என்னைச் சோதித்து விட்டாயே’ என்று கதறுகிறார்கள்.
குர் ஆனில் சொல்லப்பட்டுள்ளதைக் கேளுங்கள்
● மக்கள் தங்கள் கைகளால் எதைச் சம்பாதித்தார்களோ, அதன் (பணம்)காரணமாக தரையிலும், கடலிலும் அராஜகமும் குழப்பமும் தோன்றி விட்டிருக்கின்றன.
● உண்மையில் இறைவன் மனிதர்களுக்கு சிறிதும் அநீதி இழைப்பதில்லை. எனினும், மனிதர்கள் தமக்குத்தாமே அநீதி இழைத்துக் கொள்கிறார்கள். ● மனிதனின் நிலை எப்படி இருக்கிறதெனில், அவனுடைய இறைவன் அவனைக் கண்ணியப்படுத்தி அருட்கொடைகளையும் வழங்கினால், ‘என்னுடைய இறைவன் என்னைக் கண்ணியப் படுத்தினான்’ என்று கூறுகிறான். மேலும், அவனை சோதிக்க நாடினால், மேலும் அவனுடைய வாழ்க்கை வசதிகளைக் குறைத்து விட்டால், ‘என் இறைவன் என்னை இழிவுபடுத்தி விட்டான்’ என்று கூறுகிறான். இந்த வசனங்கள் மூலம், பணத்தால் தான் குழப்பங்கள் ஏற்படுகின்றன என்பதும், மனிதர்கள் தங்களைத் தாங்களே அழித்துக் கொண்டு, துன்பம் வரும் போது, இறைவன் மீது பழி போடுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளது தெரிய வருகிறது. பணத்தின் மீதான பற்றை குறைத்தால், பிரச்னைகளில் இருந்து தப்பிக்கலாம்.