பதிவு செய்த நாள்
20
ஜூலை
2018
01:07
வீரபாண்டி: நெய்காரப்பட்டி, மூங்கில்குத்து முனியப்பன் கோவில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு, நடந்த பாரம்பரிய எருதாட்டத்தில், 90 காளைகள் பங்கேற்றதால் இளைஞர்கள் உற்சாகமடைந்தனர்.
சேலம், நெய்காரப்பட்டி மூங்கில்குத்து முனியப்பன் கோவிலில் ஆண்டுதோறும், ஆடி மாதம் முதல் வியாழக்கிழமை, பொங்கல் விழாவை முன்னிட்டு, எருதாட்டம் நடத்தப்படுகிறது. கடந்த, 14ல் பாரம்பரியமாக உள்ள, 18 கோர்வை குழுவினருக்கு, கோவில் மற்றும் ஊர் கவுண்டர்கள் சார்பில் முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டது. அவர்கள் முனியப்பன் கோவிலில், காளைகளை கட்டி அழைத்து வரும் வடக்கயிற்றை வைத்து பூஜை செய்து, தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், அதியமான்கோட்டை உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு ஒவ்வொரு கோர்வைக்காரரும் தங்கள் குழுவினருடன் அன்று இரவு புறப்பட்டு, நேற்று முன்தினம் காளைகளுடன் நெய்காரப்பட்டி வந்தனர். நேற்று காலை, முனியப்பனுக்கு பூஜை செய்யப்பட்டது. கொண்டலாம்பட்டி, நெய்காரப்பட்டி, உத்தமசோழபுரம், அரியானூர், வீரபாண்டி, சீரகாபாடி மற்றும் பல்வேறு ஊர்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர், தங்கள் குடும்பத்துடன் கோவிலுக்கு வந்து ஆடு, கோழிகளை பலியிட்டு பொங்கல் வைத்து சுவாமி தரிசனம் செய்தனர். எருதாட்டத்தை முன்னிட்டு, பல்வேறு ஊர்களில் இருந்து அழைத்து வரப்பட்ட, 90 காளைகளையும் குளிப்பாட்டி, மஞ்சள், சந்தனம் பூசி அலங்கரித்து, நெய்காரப்பட்டி மாரியம்மன் கோவில் மைதானத்துக்கு கொண்டு வந்தனர். காளைகளை பிடிக்கவும், வேடிக்கை பார்க்கவும் கூடியிருந்த ஆயிரக்கணக்கானோர், கூச்சலிட்டு உற்சாகமாக காளைகளை வரவேற்றனர். மக்களை பார்த்து, சீறிப்பாய்ந்த காளைகளை, கோர்வை குழுக்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள், காளைகளின் இருபுறமும் கட்டப்பட்டிருந்த நீண்ட கயிறுகளை பிடித்து இழுத்து கட்டுப்படுத்தினர். போலீஸ் உதவி கமிஷனர் ஈஸ்வரன் தலைமையில், நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தீயணைப்பு வாகனம், 108 ஆம்புலன்ஸ் வாகனம் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ஏற்பாடுகளை, நெய்காரப்பட்டி பஞ்.,முன்னாள் தலைவர் ரஞ்சிதா பெருமாள், கோவில் தர்மகத்தா அண்ணாமலை, துணைத்தலைவர் கந்தசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் செய்தனர்.