சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே புதர் மண்டிக் கிடக்கும் பிரான்மலை தெப்பக்குளத்தை சீரமைத்து அதனை பாதுகாக்க கோரிக்கை எழுந்துள்ளது. மங்கைபாகர் தேனம்மை கோயில் முன் பழமையான தெப்பக்குளம் உள்ளது. 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை இதில் தண்ணீர் தேக்கப்பட்டு பராமரிக்கப்பட்டது. இந்த குளத்து தண்ணீரில் சுவாமிக்கு அபிஷேகம் செய்வது வழக்கம். மலையில் இருந்து ஓடிவரும் மழை நீர் பிடாரியம்மன் கோயில் ஊரணியில் விழுந்து அங்கிருந்து மறுகால் வாய்க்கால் மூலம் இக்குளத்திற்கு வரும் வகையில் அமைப்பு இருந்தது. தற்போது மலையில் உள்ள மழை நீர் கால்வாய்களில் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பிடாரியம்மன் ஊரணிக்கே தண்ணீர் வருவதில்லை. அப்படியே வந்தாலும் ஊரணியில் இருந்து மறுகால் பாயும் வாய்க்கால் மண் மூடிக்கிடப்பதால் மழைநீர் தெப்பக்குளத்திற்கு செல்லாமல் சாலையில் ஓடி வீணாகிறது. இதனால் தெப்பக்குளம் சில வருடங்களாக வறண்டு புதர் மண்டிக்கிடக்கிறது. புனிதமான இக்குளத்தை சிலர் திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். இது கோயிலுக்கு சாமி கும்பிட வரும் பக்தர்களுக்கு சங்கடத்தை தருகிறது.எனவே இக்குளத்திற்கு மழை நீரை கொண்டு வரும் வாய்க்கால்களை சீரமைத்து தெப்பக்குளத்தை புனிதத்தன்மையுடன் பராமரிக்க வேண்டும். இதற்கு உள்ளூர் மக்களின் பங்களிப்புடன், கோயில் நிர்வாகமும், அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.