சின்னமனுார்: தேனி மாவட்ட கோயில்களில் தீ விபத்தை தடுக்க, அறநிலையத்துறை நிர்வகிக்கும் கோயில்களில் அணையா விளக்கு வைக்கப்பட்டுள்ளது. மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தீ விபத்து ஏற்பட்ட பின், அறநிலையத்துறை கோயில்களில் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய பல்வேறு கட்டுபாடுகள் விதித்துள்ளது.
பாதுகாப்பில்லாத இடங்களில் விளக்கு ஏற்றும் போது விபத்துக்கு வழி வகுக்கும் என்பதால், அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில்களில் அணையா விளக்கு வைக்கப்பட்டுள்ளது.விளக்கு ஏற்ற நினைப்பவர்கள் கார்த்திகை விளக்கில் ஏற்றாமல், அணையா விளக்கில் நெய் ஊற்ற வேண்டும் என்று அறிவிக்ப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில், சின்னமனுார் பூலாநந்தீஸ்வரர் கோயில் உள்ளிட்ட முக்கிய கோயில்களில் இந்த அணையா விளக்கு ஏற்றப்பட்டுள்ளது. பக்தர்கள் ஊற்றும் அதிகப்படியான நெய் கீழே உள்ள சேமிப்பு கலனில் சேகரிக்கப்படும். மேலே உள்ள கலனில் தீர்ந்த பின் கீழேயுள்ள சேமிப்பு கலனிலிருந்து வரும் நெய் எரிக்கப்படுவதால், அணையாமல் தீபம் எரிகிறது. மேலும், அறநிலையத்துறை நிர்வகிக்கும் கோயில்களில் இந்த விளக்குகள் விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளது.