பதிவு செய்த நாள்
27
ஜன
2012
11:01
அவிநாசி :நட்புக்காக, சொந்தங்களை எதிர்த்து போரிட்ட கர்ணனின் நட்பு போற்றத்தக்கது; நட்புக்கு சிறந்த உதாரணமாக கர்ணன் திகழ்கிறான், என்று நெல்லை கண்ணன் பேசினார். திருமுருகன்பூண்டி ஸ்ரீசண்முகநாதர் பக்தர் பேவை சார்பில், கந்தபுராண தொடர் சொற்பொழிவு நடந்தது. பேரவை நிறுவனர் ஆறுமுகம் வரவேற்றார். நிறைவு நாளில், "குந்தி மைந்தன் என்ற தலைப்பில், நெல்லை கண்ணன் பேசியதாவது: சிவன் கோவில்களில் பெருமாள் சன்னதி இருக்கும்; ஆனால், பெருமாள் கோவிலில் சிவனுக்கு சன்னதி கிடையாது. இதற்கு காரணம், பெருமாளின் தங்கையை சிவன் திருமணம் செய்துள்ளார். அதனால், "மாப்பிள்ளையான பெருமாளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. பெண்களுக்கு எவ்வளவு சிக்கல் வருகிறதோ, அதைப்போல் மகாபாரதத்திலும் பல சிக்கல் வருகிறது. பகவானே, அதை தீர்த்து வைக்கிறார்.சூரியனுக்கு இரு மகன்கள் சனி, கர்ணன்; இருவருமே கொடுப்பார்கள். "இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க என்ற வரிகளை போற்றாத அறிஞர்களே இல்லை. இவ்வாறு எல்லா மதத்தினரையும் ஒரு வரியில் அடக்கும் சக்தி தேவாரத்துக்கு மட்டுமே உண்டு. யாழ்ப்பாண தமிழர்கள், தங்களது குழந்தை களுக்கு தேவாரம் கற்றுத்தந்துள்ளனர். அழகான தமிழில் சொல்கின்றனர். ஆனால், தமிழகத்தில் நாம் கற்றுத்தரவில்லை. இது, வேதனையான விஷயம். குழந்தைகளுக்கு தேவாரத்தை கண்டிப்பாக சொல்லிக் கொடுங்கள். "கடவுள் உண்டு என்று சொல்லும் எல்லா மதத்தினரும் ஒன்று சேர்ந்தால், "கடவுள் இல்லை என்று சொல்பவன் ஆட்டம் போட மாட்டான். எல்லா இடத்திலும் இறைவன் இருக்கிறான் என அஞ்சி வாழ்ந்தாலே போதும்; தவறுகள் நடக்காது.யாருக்கு பயப்படுகிறோமோ இல்லையோ இறைவனுக்கு பயப்பட வேண்டும். அவனை நம்பி கும்பிட வேண்டும். நம்பினால், அவன் வருவான். கோவிலுக்குள் இறைவனை தவிர யாரையும் கும்பிடாதீர்கள். ஏனென்றால், அவன் மட்டுமே பெரியவன்.
பசி என்று யாராவது கேட்டால் மனதார சோறு போடுங்கள்; செயலில் நேர்மையாக இருங்கள். இறைவன் உங்கள் பக்கம் இருப்பான். கணவன் 10 நாள் படுக்கையில் விழுந்தால், மனைவி யார் என்பது தெரியவரும். நாத்திகவாதிகள் ராவணனை தூக்கி வைத்து கொண்டாடுகின்றனர். உண்மையில் ராவணன் ஒரு பிராமணன்; ராமன் சத்ரியன். பங்காளியும் வாழ வேண்டுமென்று நினைக்க வேண்டும். விதியை யாராலும், எக்காரணம் கொண்டும் வெல்லவே முடியாது என்பதை பல புராணங்கள் தெளிவாக உணர்த்துகின்றன.வள்ளல், அழகி, வீரர்கள், துறவி ஆகியோரிடம் ஜாதி பார்க்க மாட்டார்கள். அவ்வரிசையில், கர்ணனை ஜாதி பார்க்காமல், முடி சூட்டியபின், அங்கத நாட்டுக்கு அரசனாக்கி, நண்பனாக்கி அழகு பார்த்தவன் துரியோதனன். நட்பு காரணமாக போரில் எதிர்த்து போரிடுவது, சொந்தம் என்று தெரிந்தும் கூட, நண்பனுக்காக போர் புரிந்தவன் கர்ணன். அவ்வகையில், நட்புக்கு சிறந்த உதாரணமாக அவன் திகழ்கிறான். யாராவது அவமானப்படுத்தப்படும் போது, நாம் அவனை காப்பாற்றினால், ஆயுசுக்கும் அவன் நம்மை மறக்கவே மாட்டான். அவமானப்படுத்தப்பட்ட வலியை அனுபவித்த கர்ணனை, தூக்கி விட்டவன் துரியோதனன். அதனால், அவனை நட்பு பாராட்டுகிறான். மனைவியிடம் எப்போதும் அன்பு காட்டுங்கள். திரவுபதி, கையில் புடவையை பிடித்துக் கொண்டே கண்ணனை கூப்பிட்டதால் அவன் வரவில்லை. மாறாக, இரு கைகளையும் தலைக்கு மேல் கூப்பிடுகிறாள்; உடனே, கண்ணன் அவளுக்கு சேலையை வழங்குகிறான். இறைவனிடம் சரணாகதி அடைந்தால் மட்டுமே அவன் நம்மை காப்பான். கோவில் கருவறையில் சாமி கும்பிடும் போது, இரு கைகளையும் கூப்பியவாறு வணங்குங்கள். மரணம் நெருங்கும் போது, கடவுள் உங்கள் வீட்டுக்கு வர வேண்டும்; அதுவே அவன் மீது நாம் வைத்துள்ள பக்திக்கு சாட்சி.இவ்வாறு, நெல்லை கண்ணன் பேசினார்.நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சத்ருகன் நன்றி கூறினார்.