பதிவு செய்த நாள்
25
ஜூலை
2018
02:07
உடுமலை: உடுமலை திருமூர்த்திமலையில், ஆக., 3ல் ஆடிப்பெருவிழா நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலையில், சிவன், விஷ்ணு, பிரம்மா என மும்மூர்த்திகள் எழுந்தருளியுள்ள பிரசித்தி பெற்ற அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. மலைமேல், 900 மீட்டர் உயரத்தில் பஞ்சலிங்க அருவி, திருமூர்த்தி அணை, நீச்சல் குளம் என, சிறந்த சுற்றுலா தலமாகவும் உள்ளது. மாவட்டத்தில், ஐந்து லட்சம் ஏக்கர் பரப்பளவில் விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது.’ஆடிப்பட்டம் தேடி விதை’ என்ற முதுமொழிக்கு ஏற்ப, ஆடிப்பட்டத்தில் விவசாயிகள் சாகுபடியை துவக்குவதற்கு முன்பு, ஆடி அமாவாசையன்று, மாட்டு வண்டிகளிலும், வாகனங்களில் திருமூர்த்திமலைக்கு வந்து, சுவாமியை தரிசனம் செய்து, அதற்கு பிறகே, ஆடிப்பட்ட சாகுபடியை துவக்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
ஆடி 18 அன்று, இரு கரைகளையும் தொட்டுச்சென்று, விவசாயத்தை செழிக்கச்செய்யும் நீர் நிலைகளை வணங்கி மகிழும் விழாவாக, ஆடிப் பெருக்கு விழாகொண்டாடப்பட்டு வருகிறது. மாவட்டத்தின் விவசாயத்தை கொண்டாடும் வகையிலும், சுற்றுலாவை மேம்படுத்தும் வகையிலும், திருமூர்த்திமலையில், ஆண்டு தோறும் மாவட்ட நிர்வாகம் சார்பில், ஆடிப்பெருக்கு தினமான, ’ஆடி 18, ஆடிப்பெரு விழா’ கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு, தென்மேற்கு பருவ மழை நல்ல முறையில் பெய்து, அமராவதி அணை பல ஆண்டுக்கு பிறகு, ஆடிமாதத்தில் நிரம்பி, ஆற்றில் உபரி நீர், இரு கரைகளையும் தொட்டுச் செல்கிறது. பி.ஏ.பி., திட்ட தொகுப்பு அணைகளுக்கும் நீர் வரத்து அதிகரித்து நிரம்பி வருகிறது. மூன்று ஆண்டுக்கு பிறகு, இந்தாண்டு பாசன திட்ட அணைகளில் திருப்தியான நீர் இருப்பு உள்ள நிலையில், திருமூர்த்திமலையில், வரும் ஆக.,3ம் தேதி, ’ஆடிப்பெருவிழா’ நடக்கிறது. இதில், வேளாண்மை, தோட்டக்கலைத்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளின் சார்பில் கண்காட்சி அரங்குகள், கலைநிகழ்ச்சிகள், பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.